கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முற்றுகை நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு


கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முற்றுகை நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 26 March 2019 10:15 PM GMT (Updated: 26 March 2019 6:54 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜகண்டிகை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தாது மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யும் இரும்பு உருக்கு தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலையால் அதிக அளவில் காற்று மாசு ஏற்படுவதாகவும், தொழிற்சாலையின் ஆக்கிரமிப்பில் கிராமத்திற்கு சொந்தமான நீர் நிலைகள் இருந்து வருவதாகவும், கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும், அந்த பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதனையடுத்து அந்த தொழிற்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டது. இந்த நிலையில், மேற்கண்ட தொழிற்சாலையை மற்றொரு தனியார் நிறுவனம் வாங்கி மீண்டும் அதனை புதுப்பித்து திறந்திட இருப்பதை அறிந்த கிராம மக்கள் மேற்கண்ட தனியார் தொழிற்சாலைக்கு எதிராக சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

இதனையடுத்து தொழிற்சாலையை மீண்டும் திறப்பது தொடர்பான சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் கடந்த 8-ந்தேதி கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் தொழிற்சாலையை மீண்டும் திறக்க கூடாது என வலியுறுத்தி கூட்டத்தில் பங்கேற்ற கிராம நிர்வாகிகள் வெளிநடப்பு செய்தனர். இதனால் சமாதான கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

கிராம மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கண்ட தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பகுதி மக்கள் மீண்டும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டது.

திறக்கப்பட்ட தொழிற்சாலையை கிராம மக்களின் நலன் கருதி உடனடியாக மூட வலியுறுத்தி பெண்கள் உள்பட அப்பகுதி மக்கள் 250 பேர் நேற்று காலை கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அனைவரும் தங்களது கைகளில் ஸ்மார்ட் கார்டுகள், ஆதார் அட்டைகள் போன்றவற்றை தூக்கி பிடித்தவாறு தொழிற்சாலைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்களை தாசில்தார் அலுவலக வளாகத்தில் போலீசார் அனுமதிக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் சுரேஷ்பாபு, மாவட்ட சுற்றுச்சூழல் நல பொறியாளர் ராமசுப்பு, கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தற்போது மாசு பரவாத வகையில் தொழிற்சாலை நவீன வசதிகளுடன் தொடங்கப் பட்டு 3 நாட்கள் ஆன நிலையில், மீண்டும் இது போன்ற மாசு தொடர்பான பிரச்சினை வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதனை பொதுமக்களை கொண்ட உறுப்பினர்கள் முன்னிலையில் கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் எனவும் தாசில்தார் சுரேஷ்பாபு தெரிவித்தார்.

இதனை ஏற்காத கிராம மக்கள், ஏற்கனவே நடந்த சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் தோல்வியில் முடிவடைந்த நிலையில் அந்த கூட்டத்தில் பங்கேற்ற யாருக்கும் எவ்வித தகவலையும் தெரிவிக்காமல் மீண்டும் தொழிற்சாலையை திறந்திட எப்படி அனுமதி வழங்கப்பட்டது? என அதிகாரிகளிடம் கேள்வி கேட்டு கோஷம் எழுப்பினர்.

மேலும் தங்களது ஸ்மார்ட் கார்டு, ஆதார் அட்டை போன்றவற்றை தாசில்தார் அலுவலக வெளிப்புற இரும்பு கேட்டில் நின்றவாறு அந்த வளாகத்திற்குள் தூக்கி வீசி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலையும் புறக்கணிக்கப்போவதாக அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

முற்றுகை போராட்டத்தால் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story