பாலித்தீன் பைகளை இருப்பு வைத்திருந்த கடை, குடோனுக்கு அபராதம் உடுமலை நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


பாலித்தீன் பைகளை இருப்பு வைத்திருந்த கடை, குடோனுக்கு அபராதம் உடுமலை நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 26 March 2019 10:30 PM GMT (Updated: 26 March 2019 7:07 PM GMT)

உடுமலை நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்கு வைத்து இருந்த கடை மற்றும் குடோனுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

உடுமலை,

பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து உடுமலை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தல், பதுக்கி வைத்தல், இருப்பு வைத்தல் ஆகியவை கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

மேலும் அவ்வப்போது மளிகைக்கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட இடங்களில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதமும் விதித்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களில் இதுவரை 20 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 3 டன் அளவிற்கு பிளாஸ்டிக் பொருட்களும், பாலித்தீன் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் நகராட்சி பகுதியில் சிலர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலித்தீன் பைகளை விற்பனைக்கு வைத்திருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து உடுமலை நகராட்சி ஆணையாளர் ஓ.ராஜாராம் உத்தரவின் பேரில் நகராட்சி நகர்நல அலுவலர் (பொறுப்பு) எம்.சிவக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ஆர்.செல்வம், பி.செல்வம், எஸ்.ஆறுமுகம் ஆகியோர் கொண்ட குழுவினர் சத்திரம் வீதி, தாராபுரம் சாலை, கல்பனா சாலை, பழனி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சத்திரம் வீதியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலித்தீன் பைகள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோன்று தாராபுரம் சாலையில் உள்ள கடையின் குடோனில் சோதனையிட்டதில் அங்கும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனால் அந்த குடோனுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த 2 இடங்களில் இருந்து மொத்தம் 115 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


Next Story