திண்டிவனம் அருகே, லாரி மோதி சாலையின் குறுக்கே விழுந்த உயர்கோபுர மின்விளக்கு கம்பம் - போக்குவரத்து பாதிப்பு


திண்டிவனம் அருகே, லாரி மோதி சாலையின் குறுக்கே விழுந்த உயர்கோபுர மின்விளக்கு கம்பம் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 27 March 2019 4:15 AM IST (Updated: 27 March 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே லாரி மோதி உயர்கோபுர மின்விளக்கு கம்பம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் திருச்சி-சென்னை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டிவனம், 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து தேங்காய் பாரம் ஏற்றிய லாரி ஒன்று சென்னை கோயம்பேடு நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு புறப்பட்டது. லாரியை பொள்ளாச்சி ஒட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார்(வயது 28) என்பவர் ஓட்டினார். அந்த லாரி நேற்று காலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. ஜக்காம்பேட்டை பிரிவு சாலை அருகே வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய லாரி சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த உயர்கோபுர மின்விளக்கு கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது. லாரி மோதிய வேகத்தில் உயர்கோபுர மின்விளக்கு கம்பம் சாலையின் குறுக்கே சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் லாரியின் டீசல் டேங்க் உடைந்ததால், அதிலிருந்த டீசல் முழுவதும் நெடுஞ்சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் சாலையில் கொட்டிய டீசலை கடக்க முயன்றபோது, வாகனத்துடன் வழுக்கி கீழே விழுந்தனர். இதில் இருசக்கர வாகனங்களில் வந்த 5-க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விபத்துக்குள்ளான லாரியை ஓட்டி வந்த சிவக்குமார் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதற்கிடையே இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலையில் தேங்கி நின்ற டீசலை அகற்றியதோடு, விபத்துக்குள்ளான லாரி மற்றும் உயர்கோபுர மின்விளக்கு கம்பத்தையும் அகற்றினார்கள்.

மேலும் அங்கு தீவிபத்து ஏற்படாத வகையில் தீயணைப்புத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 

Next Story