திருச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் மரணம்


திருச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் மரணம்
x
தினத்தந்தி 27 March 2019 4:30 AM IST (Updated: 27 March 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் மரணம் அடைந்தார்.

திருச்சி,

தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்வராஜ் (வயது 75). என்ஜினீயரான இவர் 1980-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை திருச்சி தொகுதி தி.மு.க. எம்.பி.யாகவும் இருந்தார். இவர் 1987-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருந்தார்.

ம.தி.மு.க. தொடங்கப்பட்டபோது, அந்த கட்சிக்கு சென்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்களில் செல்வராஜும் ஒருவர். பின்னர் தி.மு.க.வில் சேர்ந்த அவர் 2006-ம் ஆண்டு முசிறி சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்தார். இந்தநிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் செல்வராஜுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.

கடந்த ஓர் ஆண்டுகாலமாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் திருச்சி வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், செல்வராஜ் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்துவிட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செல்வராஜ் இறந்தார். அவரது உடல் தில்லைநகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி ஊர்வலம் இன்று (புதன்கிழமை) மாலை 3 மணி அளவில் திருச்சி தில்லைநகர் முதல்குறுக்கு சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படும். செல்வராஜுக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். 

Next Story