திருச்சியில் பரபரப்பு தொழில் அதிபரை கடத்தி ரூ.2½ லட்சம் பறிப்பு ரவுடி உள்பட 3 பேர் கைது


திருச்சியில் பரபரப்பு தொழில் அதிபரை கடத்தி ரூ.2½ லட்சம் பறிப்பு ரவுடி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 March 2019 10:15 PM GMT (Updated: 26 March 2019 8:11 PM GMT)

திருச்சியில் தொழில் அதிபரை கடத்தி ரூ.2½ லட்சம் பறித்த ரவுடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் நகரை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 33). தொழில் அதிபரான இவர் ஆன்-லைன் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் உறையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் சிவபாலனிடம், ‘லிப்ட்’ கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறினார். சின்ன செட்டி தெரு அருகே சென்ற போது ஒரு டீக்கடை முன்பு அந்த மர்மநபர் இறங்கினார். மேலும் சிவபாலனை டீ குடிக்க வருமாறு அவர் கேட்டுள்ளார். அதற்கு சிவபாலன் மறுத்துவிட்டு புறப்பட முயன்றார்.

அப்போது அங்கு மேலும் மர்ம நபர்கள் 2 பேர் திடீரென வந்தனர். 3 பேரும் சேர்ந்து சிவபாலனை கடத்தி சென்று அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தின் அருகே ஒரு அறையில் வைத்து அடைத்தனர். மேலும் அவரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.2½ லட்சம் தர வேண்டும் எனவும், இல்லையெனில் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினர். இதனால் பதறி போன சிவபாலன் பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து ரூ.2½ லட்சத்தை ஒரு இடத்திற்கு எடுத்து வர சிவபாலன் கூறினார். அதன்படி உறவினர்கள் பணத்தை எடுத்து வந்து கொடுத்தனர். அந்த பணத்தை மர்ம நபர்களிடம் அவர் கொடுத்தார். அதன்பின் அவரை விடுவித்தனர். இதையடுத்து சிவபாலன் உறையூர் போலீஸ் நிலையத்திற்கு நேரடியாக சென்று புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிவபாலனை கடத்தியது உறையூர் பணிக்கன் தெருவை சேர்ந்த ரவுடி சுரேஷ் என்கிற நொண்டி சுரேஷ் (36), பிரபாகரன் (39), நாச்சியார்பாளையத்தை சேர்ந்த சாமிநாதன் (39) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ரவுடி சுரேஷ் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களில் சாமிநாதன் அ.ம.மு.க.வில் உறையூர் பகுதி செயலாளராக பொறுப்பு வகித்து வருவதாகவும், கைதானவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மீதி பணத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போலீசார் கூறினர்.

தொழில்அதிபரை கடத்தி ரூ.2½ லட்சம் பறித்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story