மதுரை ஆவினில் முறைகேடு மேலாளர்கள் உள்பட 13 பேர் பணியிடை நீக்கம்
மதுரை ஆவினில் நடந்த முறைகேடு தொடர்பாக மேலாளர்கள் உள்பட 13 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை,
மதுரை ஆவினில் கடந்த சில மாதங்களாக பல்வேறு புகார் எழுந்து வருகிறது. அதில் பணிபுரியும் ஊழியர்களின் ஆபாச வீடியோ வெளியீடு, அதை தொடர்ந்து நிர்வாகத்திற்கும், பணியாளர்களுக்கும் இடையே மோதல் என பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க மேலாண்மை இயக்குனர் காமராஜ் உத்தரவிட்டார்.
அதன்படி பால்வளத்துறை துணை கமிஷனர் கிறிஸ்துதாஸ் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதில் 2 துணை பதிவாளர்கள், 2 சார்பதிவாளர்கள் இடம் பெற்றிருந்தனர். அந்த குழு ஆவின் அலுவலகத்தில் கடந்த 19–ந் தேதி முதல் 21–ந் தேதி வரை விசாரணை நடத்தியது.
அதில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை அந்த குழு கண்டுபிடித்தது. இதனால் கடந்த ஓராண்டில் 50 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி குறைந்தது. இது தொடர்பான ஆவணங்களையும் விசாரணை குழு கைப்பற்றியது. ஆய்வுக்கு பின்னர் அந்த குழு அறிக்கை ஒன்றை அரசின் முதன்மை செயலாளர் கோபாலுக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அறிக்கையின் அடிப்படையில் பால்வளத்துறை மேலாண்மை கமிஷனர், மதுரை ஆவின் மேலாளர்கள் கார்த்திகேயன், பூங்கொடி உள்பட 13 பேரை பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளார். ஒரே நாளில் 13 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது ஆவின் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.