மத்திய அரசு அதிகாரங்களை பரவலாக்க வேண்டும் பிரதமர் மோடி, பொய்களை பிரசார ஆயுதமாக பயன்படுத்துகிறார் சித்தராமையா குற்றச்சாட்டு
பிரதமர் மோடி, பொய்களை பிரசார ஆயுதமாக பயன்படுத்துகிறார் என்று சித்தராமையா குற்றம்சாட்டினார்.
பெங்களூரு,
பிரதமர் மோடி, பொய்களை பிரசார ஆயுதமாக பயன்படுத்துகிறார் என்று சித்தராமையா குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற தேர்தல்
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று பெங்களூருவில், டுவிட்டரில் தன்னை பின் தொடர்பவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கடந்த 2018-ம் ஆண்டு அமைத்தோம். அன்றே, நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் சேர்ந்து எதிர்கொள்வது என்று தீர்மானித்தோம்.
வாய்ப்பு கிடைக்கவில்லை
தன்னம்பிக்கையுடன் நாங்கள் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிறோம். இதன் மூலம் ஜனநாயகத்திற்கு எதிராக உள்ள பா.ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
கூட்டணியில் அதிருப்தி இருப்பது உண்மை தான். ஒரு சில இடங்களில் நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறார்கள். கூட்டணி மூலம் தேர்தலை எதிர்கொள்வதால், பலருக்கு டிக்கெட் வாய்ப்பு கிடைக்கவில்லை.
காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு
அதிருப்தியை சரிசெய்யும் பணியை நான் செய்து வருகிறேன். அதை செய்யும் திறன் என்னிடம் உள்ளது. மைசூருவில் காங்கிரசுக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது. அதனால் மைசூரு தொகுதியை கேட்டு பெற்றுள்ளோம்.
துமகூரு எங்கள் கட்சி வசம் உள்ள தொகுதி. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் அதை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு விட்டுக்கொடுத்துள்ளோம். தனிப்பட்ட முறையில் மோடியை விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.
பொய் பேசுகிறார்
சில விஷயங்களில் அவர் எடுக்கும் முடிவுகள் குறித்து நான் கருத்து தெரிவிக்கிறேன். பிரதமர் மோடி அதிக பொய் பேசுகிறார். சில பொய்களை பிரசார ஆயுதமாக அவர் பயன்படுத்துகிறார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதபோது அதை நான் விமர்சிக்கிறேன்.
சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்ததால், நான் வேதனை அடைந்தேன். மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினேன். சட்டமன்ற தேர்தல் நெருங்கும்போது, எனக்கு எதிராக தவறான பிரசாரம் செய்தனர்.
அதிகாரங்களை பறிக்கிறது
நாங்கள் செயல்படுத்திய திட்டங்கள் பற்றி சரியான முறையில் பிரசாரம் செய்யவில்லை. நான் இந்து விரோதி என்று தவறான தகவல்களை பரப்பினர். எனக்கு ஏற்பட்ட இந்த தோல்வியை நான் சவாலாக ஏற்றுக்கொண்டுள்ளேன்.
மத்திய அரசு அதிகாரத்தை பரவலாக்க வேண்டும். அதை விடுத்து மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கிறது. இது சரியல்ல. அதிகாரத்தை பரவலாக்கினால் மட்டுமே, வளர்ச்சி சாத்தியம். இதை மோடி புரிந்துகொள்ள வேண்டும்.
ஜனநாயகத்திற்கு விரோதமானது
ஏழை குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருமான வசதி செய்து கொடுக்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இதற்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும். இது புரட்சிகரமான திட்டம். இதனால் நாடு திவாலாகிவிடும் என்று சொல்வது சரியல்ல.
மாநில அரசியலில் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதனால் தான் தேசிய அரசியலுக்கு செல்லவில்லை. ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் பிற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுப்பது, ஜனநாயகத்திற்கு விரோதமானது.
தேசபக்தி
தன்னை காவலாளி என்று சொல்லிக்கொள்ளும் மோடிக்கு இது தெரியாதா?. மோடியின் ஆதரவு இல்லாமல் ஆபரேஷன் தாமரை நடைபெற வாய்ப்பு இல்லை. இதுபோன்ற நிகழ்வுகள், அரசியலமைப்பு சட்டத்திற்கு அபாயகரமானது.
நாம் இந்தியர்கள். இங்கு வாழ்பவர்கள் அனைவருக்கும் தேசபக்தி உள்ளது. அது நாடு சுதந்திரம் அடையும் முன்பே நிரூபிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வசிக்கும் அனைவரையும் நேசிக்க வேண்டும். நாட்டு மக்களை மரியாதையுடன் நடத்துவது தான் சிறந்த தேசபக்தி.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story