சரக்கு-சேவை வரியை விதித்து விவசாயத்தின் கழுத்தை நெரித்த பா.ஜனதா அரசு - திண்டுக்கல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
‘சரக்கு-சேவை வரியை விதித்து விவசாயத்தின் கழுத்தை பா.ஜனதா அரசு நெரித்தது‘ என்று திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
திண்டுக்கல்,
மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்தது. கூட்டத்துக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்திய விடுதலைக்காக எத்தனையோ மன்னர்கள், பாளையக்காரர்கள் சேர்ந்து போராடினர். அவர்கள் திண்டுக்கல்லுக்கு வந்து ஆங்கிலேயருக்கு எதிராக போர் புரிந்தனர். இதனால் தென்னகத்தின் குருஷேத்திரமாக திண்டுக்கல் திகழ்கிறது. திண்டுக்கல் என்றாலே வீரர்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள்.
ஜெயலலிதா பற்றி மாறி, மாறி பேசுவதில் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி ஆகியோருக்கு போட்டி வைத்தால் திண்டுக்கல் சீனிவாசன் தான் வெற்றிபெறுவார். இதேபோல் அதிக ஊழல் செய்வது யார் என்று அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் இடையே போட்டி வைக்கலாம். அதில் வேலுமணி வெற்றி பெற்று விடுவார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நான் கடவுள் என்று கூறியதாக விமர்சனம் செய்து இருக்கிறார். அரசு துறை சார்பில் தியேட்டர்களில் திரையிடப்பட்ட விளம்பரத்தில் பூசாரி எந்த சாமிக்கு பூஜை செய்ய வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி பெயருக்கு என்று விளம்பரம் வருகிறது. அதை தான் சொன்னேன்.
கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் 44-வது பக்கத்தில் விவசாயிகளுக்கு அடக்க விலை, 50 சதவீத லாபம் வழங்கப்படும் என்று மோடி சொன்னார். இந்த கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைத்ததா? 50 சதவீத லாபம் கிடைத்ததா? அதற்கு பா.ஜனதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நெல் உள்பட அனைத்து உணவு பொருட்களுக்கும் ஆதார விலை கிடைக்கவில்லை. ஆனால், விவசாயத்துக்கே சரக்கு-சேவை வரியை விதித்த சர்வாதிகார ஆட்சி தான் மோடியின் அரசு. உரம், விவசாய கருவிகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் என அனைத்துக்கும் வரி விதித்துள்ளது.
விவசாயத்தின் கழுத்தை நெரித்து கொண்டிருக்கும் அரசாக பா.ஜனதா அரசு உள்ளது. இந்தியா விவசாய நாடு. 60 சதவீதம் பேர் விவசாயிகள் உள்ளனர். அந்த விவசாயிகளின் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய மறுக்கிறது. ஆனால், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பணக்காரர்களுக்கும் கடனை தள்ளுபடி செய்கிறது. தற்போது விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று பா.ஜனதா அரசு அறிவித்தது. இது தேர்தல் நேர நாடகம் ஆகும்.
காங்கிரஸ் தலைமையிலான அரசு மத்தியில் இருந்த போது ரபேல் விமானங்களை வாங்குவதற்கு ரூ.626 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. அதையும் அரசின் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்தது. ஆனால், பா.ஜனதா அரசு ரூ.1,670 கோடிக்கு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளது. அந்த ஒப்பந்தம் கொடுப்பதற்கு 12 நாட்களுக்கு முன்பு தான் அந்த நிறுவனமே தொடங்கப்பட்டு இருக்கிறது. எனவே, தான் மோடி அரசை கார்ப்பரேட் அரசு என்று கூறுகிறேன்.
அதேபோல் ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்பதாக கூறினார்கள். அந்த பணத்தை இந்தியா முழுவதும் ஒவ்வொரு நபரின் வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் செலுத்துவதாக கூறினார்கள். ஆனால், ரூ.15 கூட செலுத்தவில்லை. கருப்பு பணத்தையாவது மீட்டார்களா என்றால் அதுவும் இல்லை. இந்த சர்வாதிகார அரசிடம் இருந்து நாட்டை மீட்பதற்கு நாம் சபதம் ஏற்க வேண்டும்.
இந்த நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவுக்கு 2-வது சுதந்திர போர் ஆகும். ஊழல்வாதிகளை விரட்ட நடைபெறும் போர் ஆகும். விருதுநகரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டது. ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களில் அரசு மருத்துவமனைகளில் கெட்டுபோன ரத்தத்தை ஏற்றியதால் 15 பெண்கள் இறந்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அதை மரணம் என்று விட்டுவிட முடியாது. அவர்களை அரசு கொலை செய்து இருக்கிறது.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொள்ளாச்சி சம்பவம் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்றுள்ளது. 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலர் தற்கொலை செய்துள்ளனர். ஒருசிலர் கொலை செய்யப்பட்டும் இருக்கிறார்கள். இதற்கு யார் காரணம். 7 ஆண்டுகளாக போலீஸ் செயல்படவில்லையா? போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால், பல பெண்களை காப்பாற்றி இருக்கலாம்.
ஆனால், தி.மு.க. மீது பழியை சுமத்தினால் பிரச்சினையை திசை திருப்பி தப்பிவிடலாம் என்று சில செய்திகளை பரப்புகிறார்கள். தைரியம் இருந்தால் முறையாக விசாரணை நடத்துங்கள். அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். 7 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி நடக்கிறது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நல்லவர். அவருக்கும், எங்களுக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லை. ஆனால், அவருடைய 2 மகன்களுக்கு சம்பந்தப்பட்டு உள்ளனர். உண்மையை மூடிமறைக்க முயற்சி செய்கிறார்கள்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். எனவே, அவர் கையெழுத்திட முடியாத நிலை என்று கூறி கைரேகை வைக்கப்பட்டு இருந்தது. அதில் முறைகேடு நடந்துள்ளதாக தி.மு.க.வின் சரவணன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானி, ஆளும் கட்சிக்கு துணை நின்றதாக கூறி வெற்றி செல்லாது என்று தீர்ப்பு அளித்துள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நான் மட்டும் கூறவில்லை. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரும் கூறினர். ஓ.பன்னீர்செல்வம் கடற்கரைக்கு சென்று ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தார். ஆவியோடு எல்லாம் பேசினாரே, சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார். பின்னர் பிரதமர் தமிழகம் வந்து 2 பேரையும் சேர்த்து வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்தார்.
இந்த தேர்தலின் முடிவில் விரைவாக மத்தியிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது மக்களுக்கு பல்வேறு திட்டங்களையும், பணிகளையும் செய்வோம். மேலும் ஜெயலலிதா மர்ம மரணத்தையும் விட மாட்டோம். எதிர்கட்சி தான், எங்களுக்கு வேறுபாடு உண்டு. ஆனால், ஒரு முதல்-அமைச்சராக இருந்தவர் மர்மமாக இறந்துள்ளார். முதல்-அமைச்சருக்கே அந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாகும். ஜெயலலிதா மரணத்தை விசாரித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் வைத்து பூட்டுவது தான் முதல் வேலை.
நரேந்திரமோடி, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை வீட்டுக்கும் அனுப்பும் நாள் ஏப்ரல் 18 ஆகும். எங்களுக்கு வாக்களித்து தேர்வு செய்து பொறுப்புக்கு அனுப்பினால் நல்ல திட்டங்களை கொண்டு வருவோம். நாற்பதும் நமதே, நாடும் நமதே என்று கூறும் வகையில் மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story