மத்தியில் மீண்டும் மோடி ஆட்சிதான் வரும் - சிதம்பரத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு


மத்தியில் மீண்டும் மோடி ஆட்சிதான் வரும் - சிதம்பரத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 27 March 2019 4:20 AM IST (Updated: 27 March 2019 4:20 AM IST)
t-max-icont-min-icon

மத்தியில் மீண்டும் மோடி ஆட்சிதான் வரும் என்று சிதம்பரத்தில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

சிதம்பரம், 

அ.தி.மு.க. கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து சிதம்பரம் போல் நாராயணன் தெருவில் நேற்று இரவு பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.பி. தலைமை தாங்கினார். சந்திரகாசி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாண்டியன், முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ம.க. தெற்கு மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார்.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் என்னால் அடையாளம் காட்டப்பட்டவர். ஆனால் இப்போது அவர் வன்முறைகளை தூண்டும் வகையில் பேசி வருகிறார்.

தமிழகத்தில் 370 சமுதாயங்கள் உள்ளன. அந்த சமுதாயங்கள் வளர வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால் அவரது பேச்சு மக்களுக்கு எதிராக உள்ளது. சமூக ஒற்றுமையை கெடுக்கும் வகையில் அவரது பேச்சு உள்ளது.

வடலூரில் ஒரு மாநாடு நடத்தினோம். அந்த மாநாட்டில் திருமாவளவன் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் பேசும் போது எனக்கு அம்பேத்கர் விருதை திருமாவளவன் வழங்கினார். மதுரை மேலூரில் நடந்த மாநாட்டில் தமிழ்குடிதாங்கி என்ற பட்டத்தையும் அவர் தான் எனக்கு கொடுத்தார். ஈழத்தமிழர் பிரச்சினைக்காக சென்னையில் திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்தார். அந்த உண்ணாவிரதத்தை நான் முடித்து வைத்தேன்.

அப்போது அவர் என் பேச்சை கேட்பார். இப்போது என் அறிவுரைகளை கேட்பதில்லை. கட்சி என்றால் ஒரு கொள்கை இருக்க வேண்டும். ஆனால் அவரிடம் கொள்கைகளும் இல்லை, திட்டங்களும் இல்லை.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல்- அமைச்சரும், துணை முதல்- அமைச்சரும் பல்வேறு சாதனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களை பற்றி கவலைப்படுகிற ஆட்சியாக இருக்கிறது. நாங்களும் ஆலோசனைகளை கூறி வருகிறோம். முதல்- அமைச்சரும், நானும் விவசாயி. எனக்கு விவசாயத்தை பற்றி நன்றாக தெரியும். சிதம்பரம் தொகுதியில் 400 கோடி ரூபாயில் கொள்ளிடம் தடுப்பு அணை திட்டத்தை அமல்படுத்துவதாக அருண்மொழிதேவன் சொன்னார். அது ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம். மத்தியில், மோடி ஆட்சி தான் மீண்டும் வரப்போகிறது. 40 தொகுதிகளிலும் நம்ம கூட்டணி தான் வெற்றி பெறப்போகிறது. மோடி ஆட்சிக்கு வந்ததும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வராதபடி நாம் அழுத்தம் கொடுப்போம். மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்ததே எதிர்க்கட்சி தலைவர் தான். அவர் என்னை பற்றி ஏதேதோ பேசி வருகிறார். கோபம் குடியை கெடுக்கும், நாம் மக்களை பற்றி சிந்திக்கிறோம்.

பா.ம.க., அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைகள் அற்புதமானது. பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையில் 90 சதவீதத்தை தி.மு.க. காப்பி அடித்து உள்ளது. தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றும் திட்டங்களைத்தான் சொல்லி இருக்கிறோம். 8 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி நன்றாக இருக்கிறது. மக்களிடம் இந்த ஆட்சி பற்றி முணுமுணுப்பு இல்லை. இந்த ஆட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள். முன்பு ஒரு கூட்டத்தில் நான் கருணாநிதியிடம் பேசும் போது, உங்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கிறது. அதனால் மு.க.ஸ்டாலினிடம் துணை முதல்-அமைச்சர் பதவியை கொடுக்க சொன்னேன். அதன்பிறகு 4 மாதங்கள் கழித்து துணை முதல்-அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இதை அவரே மேடையில் பேசி இருக்கிறார்.

நமது கூட்டணி வளர்ச்சிக்கான கூட்டணி. தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி தான் அக்கறை கொள்கிறோம். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் பெறுவார். அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம் தொகுதிகளில் இதை விட அதிகமாக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார். 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

கூட்டத்தில் வேட்பாளர் சந்திரசேகர் மற்றும் அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பா.ம.க. மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

Next Story