50 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானை சேர்ந்தவருக்கு இந்திய குடியுரிமை ஐகோர்ட்டில், உள்துறை அமைச்சகம் தகவல்


50 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானை சேர்ந்தவருக்கு இந்திய குடியுரிமை ஐகோர்ட்டில், உள்துறை அமைச்சகம் தகவல்
x
தினத்தந்தி 27 March 2019 4:30 AM IST (Updated: 27 March 2019 4:24 AM IST)
t-max-icont-min-icon

50 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானை சேர்ந்தவருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை, 

50 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானை சேர்ந்தவருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கராச்சியில் பிறந்தவர்

மும்பையில் வசித்து வருபவர் பாகிஸ்தானை சேர்ந்த ஆசிப் கராடியா(வயது53). இவரது பெற்றோர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்.

இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அவரது விசா காலாவதியானது. இதையடுத்து பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கவில்லை எனில் அவரது விசா காலத்தை நீட்டிக்கமாட்டோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதை எதிர்த்து ஆசிப் கராடியா மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

நான் பாகிஸ்தான் கராச்சியில் பிறந்தவன். பிறந்து சில ஆண்டுகளில் எனது தாய் என்னை இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட்டார். 50 ஆண்டுகளாக நான் இந்தியாவில் வசிக்கிறேன்.

இந்திய குடியுரிமை

பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு எனது தாய், தந்தை இருவரும் குஜராத்தில் பிறந்தனர். எனது மனைவி, குழந்தைகள் அனைவரும் இந்திய குடிமக்கள். நான் வாழ்வது, பணிசெய்வது அனைத்தும் இங்கு தான். வரி செலுத்துகிறேன். ஆதார்கார்டு, ரேஷன்கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை கூட என்னிடம் உள்ளது. ஆனால் பாஸ்போர்ட் மட்டும் இல்லை.

எனது இந்திய குடியுரிமைக்கான விண்ணப்பம் 7 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் உள்ளது. எனவே நான் இந்தியாவில் தொடர்ந்து வாழ நடவடிக்கை எடுக்கவேண்டும்

இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நேற்று முன்தினம் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு 10 நாட்களுக்குள் இந்திய குடியுரிமை வழங்கப்படும் என தெரிவித்தது.

Next Story