பிவண்டி நாடாளுமன்ற தொகுதியில் ‘வேட்பாளரை மாற்றாவிட்டால் ராஜினாமா செய்வோம்’ காங்கிரஸ் கவுன்சிலர்கள் எச்சரிக்கை
பிவண்டி நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளரை மாற்றவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்வோம் என அப்பகுதி காங்கிரஸ் கவுன்சிலர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
மும்பை,
பிவண்டி நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளரை மாற்றவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்வோம் என அப்பகுதி காங்கிரஸ் கவுன்சிலர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
வேட்பாளருக்கு எதிர்ப்பு
பிவண்டி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் சுரேஷ் தவாரே அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் சுரேஷ் தவாரேக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலர்களே போர் கொடி தூக்கி உள்ளனர்.
கவுன்சிலர்கள், சுரேஷ் தவாரேயை பிவண்டி வேட்பாளராக நிறுத்தக்கூடாது என வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் கவுன்சிலர் இம்ரான் கான் கூறியதாவது:-
ராஜினாமா செய்வோம்
பிவண்டி மாநகராட்சியில் 47 காங்கிரஸ் கவுன்சிலர்கள் உள்ளோம். இதில், 42 பேர் சுரேஷ் தவாரேக்கு எதிராக உள்ளனர். கட்சி மேலிடம் வேட்பாளரை மாற்றவில்லை எனில் நாங்கள் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வோம். இதற்கு முன் நடந்த தேர்தல்களில் சுரேஷ் தவாரே கட்சிக்கு எதிராக செயல்பட்டவர் ஆவார். அவர் கட்சி வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. அவர் கட்சியை தோற்கடிக்கத்தான் செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
வருத்தம் அளிக்கிறது
கவுன்சிலர்கள் தனக்கு எதிராக இருப்பது குறித்து சுரேஷ் தவாரே கூறுகையில், நான் என்னை வேட்பாளராக அறிவிக்கவில்லை. டெல்லி மற்றும் மாநில தலைவர்கள் தான் என்னை வேட்பாளராக தேர்வு செய்து உள்ளனர். எங்கள் கட்சி பிவண்டியில் வலிமையாக உள்ளது. இங்கு வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது.
சிலர் சொந்த கட்சிக்கு எதிராகவே இருப்பது வருத்தம் அளிக்கிறது. எதிர்க்கட்சியினரின் பேச்சை கேட்டு அவர்கள் அப்படி செயல்படுகின்றனர், என்றார்.
Related Tags :
Next Story