கந்தனேரி கூட்டுரோட்டில், விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் - பிரசாரத்தின்போது ஏ.சி.சண்முகம் வாக்குறுதி


கந்தனேரி கூட்டுரோட்டில், விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் - பிரசாரத்தின்போது ஏ.சி.சண்முகம் வாக்குறுதி
x
தினத்தந்தி 26 March 2019 11:32 PM GMT (Updated: 26 March 2019 11:32 PM GMT)

கந்தனேரி கூட்டுரோட்டில் விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பேன் என தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க.கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வாக்குறுதி அளித்தார்.

அணைக்கட்டு,

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவர் நேற்று காலை 9 மணியளவில் அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட பொய்கை பிள்ளையார் குப்பம் கிராமத்தில் வாக்குசேகரிப்பை தொடங்கினார்.

தொடர்ந்து அவர் சத்தியமங்கலம், புத்தூர், இலவம்பாடி, மருதவல்லிபாளையம், வல்லண்டராமம், வசந்தநடை, கெங்கநல்லூர், அணைக்கட்டு ஆகிய ஊர்களில் வாக்கு சேகரித்து பேசினார். பின்னர் பிற்பகல் 3 மணி முதல் செதுவாலை, விரிஞ்சிபுரம். இறைவன்காடு, ஊணை கந்தனேரி, கழனிபாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

அப்போது பொதுமக்கள் “கோடைக்காலங்களில் குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது. எனவே குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கோரிக்கை வைத்தனர். அதற்கு அணைக்கட்டு ஒன்றியத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இணைக்கப்படாத கிராமங்களை அந்த திட்டத்தில் இணைத்து காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

மேலும் கந்தனேரி பகுதியில் அவர் பிரசாரம் செய்தபோது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் “கந்தனேரி கூட்டுரோடு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் விபத்துகள் நடக்கின்றது. இதனை தடுக்க மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என கடந்த 2012-ம் ஆண்டு முதல் கோரிக்கை வைத்து போராடி வருகிறோம். ஆனால் மத்தியஅரசும் மாநில அரசும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றனர்.

அதற்கு “தேர்தலில் வெற்றி பெற்றவுடன் முக்கிய கோரிக்கையான மேம்பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வேன். வேலைவாய்பு முகாம் நடத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவேன்” என வாக்குறுதி அளித்தார்.

வாக்கு சேகரிப்பின்போது அவருடன் அணைக்கட்டு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், ஆவின் தலைவருமான த.வேலழகன், பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் இளவழகன், தொகுதி செயலாளர் வெங்கடேசன். பா.ஜ.க. மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் மற்றும் அ.தி.மு.க. முன்னாள் தொகுதி செயலாளர் ஆனந்தன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் சூரியகலா, துணைத்தலைவர் சேரன், ஊராட்சி கழக செயலாளர் கண்ணன் உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story