சேலம் அன்னதானப்பட்டியில் கள்ளக்காதலி அடித்துக்கொலை - மில் உரிமையாளர் கைது
சேலம் அன்னதானப்பட்டியில் கள்ளக்காதலி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மில் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம்,
சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 58). இவர் அன்னதானப்பட்டியில் உள்ள கே.பி. கரடு பகுதியில் கல்மாவு மில் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. ரவியின் மில்லில் கொண்டலாம்பட்டி பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்த பாப்பாத்தி (35) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். பாப்பாத்தியின் கணவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 4 மகன்கள் உள்ளனர்.
மில்லில் வேலை செய்து வந்த பாப்பாத்திக்கும், ரவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் மில் அலுவலகத்தில் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும் பாப்பாத்தியின் குழந்தைகளுக்கான படிப்பு செலவையும் ரவியே செய்து வந்தார்.
கடந்த 24-ந்தேதி வேலைக்கு சென்ற பாப்பாத்தி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடி வந்தனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் பாப்பாத்தியின் உறவினர் ஒருவருக்கு ரவி போன் செய்தார். அந்த நபரிடம், பாப்பாத்தி தன்னுடைய அலுவலகத்தில் இருப்பதாகவும், அவருக்கு உடல்நிலை சரியில்லை எனவும், ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறும் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு பாப்பாத்தியின் குடும்பத்தினர் அங்கு சென்று ரவியிடம், ‘பாப்பாத்தி எங்கே?’ என்று கேட்டனர். அவர் காட்டிய இடத்தில் கட்டில் கீழே போர்வையால் சுற்றப்பட்டு பாப்பாத்தி கிடந்தார். இதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பாப்பாத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தது அவர்களுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து அவர்கள் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாப்பாத்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கே குடிபோதையில் கிடந்த ரவியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பாப்பாத்தி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் ரவி அவரது தலைமுடியை பிடித்து சுவற்றில் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. பாப்பாத்தியை 2 நாட்களுக்கு முன்பு கொலை செய்து விட்டு எப்படி மறைப்பது என்பது தெரியாமல் அங்கேயே மது குடித்து வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story