மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜர்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள பேராசிரியை நிர்மலாதேவி நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜரானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் அந்த கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது 3 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்த நிலையில் வழக்கு தொடர்பாக நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் கோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜரானார். பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் ஆஜரானார்கள். இதை தொடர்ந்து 3 பேரும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 22–ந் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து கோர்ட்டில் இருந்து வெளிவந்த நிர்மலாதேவி அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். அவர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக்கூடாது என நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டு இருப்பதால், அவர் கோர்ட்டில் இருந்த பத்திரிகையாளர்களை பார்த்ததும் வேகமாக சென்றது குறிப்பிடத்தக்கது.