காசநோயை 6 மாதத்தில் குணப்படுத்தலாம் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பேச்சு
காசநோயை 6 மாதத்தில் குணப்படுத்தலாம் என வேலூர் பென்லேண்ட் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின்பேகம் பேசினார்.
வேலூர்,
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு வேலூர் அரசு பென்லேண்ட் மருத்துவமனையில் மருத்துவ முகாம் நடந்தது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு குடும்பநல துணை இயக்குனர் சாந்தி, பென்லேண்ட் மருத்துவ அலுவலர் செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட காசநோய்கள் துணை இயக்குனர் பிரகாஷ் அய்யப்பன் வரவேற்றார். உலக சுகாதார நிறுவன ஆலோசகர் டாக்டர் டெல்பினா ‘காசநோய் பாதிப்புகள் குறித்தும் அதனை கட்டுப்படுத்துவது’ குறித்தும் பேசினார்.
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின் பேகம் தலைமை தாங்கி பேசியதாவது:-
ஒருவருக்கு காசநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருந்தால் சளி, இருமல், மாலையில் காய்ச்சல், பசி எடுக்கும். உடல் சோர்வாக காணப்படுவதுடன், உடல் எடை குறையும். காசநோயாளிகளுக்கு முடி, நகங்களை தவிர மூளை, நுரையீரல் உள்ளிட்ட அனைத்து உடல் உறுப்புகளும் பாதிக்கப்படும். காசநோய்க்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் சத்தான உணவுப்பொருட்கள் சாப்பிட மாதந்தோறும் 500 ரூபாய் வழங்கப்படுகிறது.
காசநோய் கொடிய நோய். ஆனால் குணப்படுத்தக்கூடியது. 6 மாதங்கள் தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தால் குணப்படுத்த முடியும். சளி, இருமல் தொடர்ந்து இருந்தால் உடனடியாக அருகேயுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும். காசநோய் இல்லாத மாவட்டமாக வேலூரை மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில், பென்லேண்ட் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், வேலூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவ அலுவலர் பிரிசில்லா நன்றி கூறினார்.
அதைத்தொடர்ந்து மருத்துவ முகாம் நடந்தது. இதில், வேலூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காசநோய் அறிகுறிக்கான பரிசோதனை, ரத்த அழுத்தம், எடை, உயரம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story