ஆரணியில் நள்ளிரவில் பரபரப்பு அரசினர் மகளிர் பள்ளியில் திடீர் தீ இலவச காலணிகள் எரிந்து நாசம்
ஆரணி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் அறையில் குவித்து வைக்கப்பட்டிருந்த இலவச காலணிகள் மற்றும் பொருட்கள் எரிந்தன.
ஆரணி,
ஆரணி கோட்டை மைதானம் அருகே அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆரணி நகரம் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது தேர்வுகள் நடந்து வருகின்றன. பள்ளியின் ஒரு அறையில் ஒவ்வொரு ஆண்டும் மாணவிகளுக்கு அரசால் இலவசமாக வழங்கப்பட்டது போக மீதம் உள்ள காலணிகள், புத்தகங்கள் மற்றும் தேவையற்ற பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த அறையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. புகை வந்ததை பார்த்ததும் அங்கு இரவுப்பணியில் இருந்த காவலாளி உடனடியாக தலைமைஆசிரியை சுடர்கொடிக்கு போனில் தகவல் அளித்தார்.
இதனையடுத்து ஆரணி தீயணைப்பு படையினர் நிலைய அலுவலர் பேச்சிக்காளை தலைமையில் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த அறை மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். எனினும் இந்த தீவிபத்தில் இலவச காலணிகள், புத்தகங்கள், தேவையற்று குவிக்கப்பட்ட பொருட்கள் எரிந்து விட்டன. நல்ல வேளையாக இரவு நேரத்தில் தீவிபத்து நடந்ததால் விபரீதங்கள் தவிர்க்கப்பட்டது.
இந்த தீவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. அது குறித்து ஆரணி நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story