தா.பழூர் அருகே வாகன சோதனை: வங்கி ஊழியரிடம் ரூ.1¼ லட்சம் பறிமுதல்


தா.பழூர் அருகே வாகன சோதனை: வங்கி ஊழியரிடம் ரூ.1¼ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 27 March 2019 11:15 PM GMT (Updated: 27 March 2019 5:18 PM GMT)

தா.பழூர் அருகே நடைபெற்ற வாகன சோதனையின்போது வங்கி ஊழியரிடம் இருந்த ரூ.1¼ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ஜெயங்கொண்டம்,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே வாழைக்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி காமராஜ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான பறக்கும் படையினர், அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழமைக்கேல்பட்டியை சேர்ந்த அகஸ்டின் (வயது 25) என்பதும், தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருவதும், மேலும் அவரிடம் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 100 இருந்ததும் தெரிய வந்தது. இந்த பணத்தை தான் வேலை பார்க்கும் வங்கிக்கு கொண்டு செல்வதாக அகஸ்டின் தெரிவித்தார். ஆனால், பணத்தை கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து ஜெயங்கொண்டம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Next Story