தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
தேர்தலில் வாக்களிப் பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் பழைய பஸ் நிலையம், கீழராஜா வீதி, பிருந்தாவனம், பால் பண்ணை, அரசு மகளிர் கலைக்கல்லூரி, புதிய பஸ் நிலையம் வழியாக மீண்டும் பொது அலுவலக வளாகத்தை வந்தடைந்தது. இந்த மாரத்தான் போட்டியில் 800-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோரும் ஓடினர்.
இதைதொடர்ந்து கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலை சிறப்பாக நடத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து பல்வேறு தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது 77.37 சத வீதமும், 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது 76.45 சத வீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரை மற்றும் ஆலோசனைகளின் படி வாக்காளர்கள் அனைவரும் விடுபடாமல் வாக்களிப்பதை வலியுறுத்தி அனைத்து தாலுகாக்களிலும் ஊர்வலங்கள், இருசக்கர வாகன ஊர்வலம், மனித சங்கிலி, துண்டு பிரசுரங்கள், பதாகைகள், சுவரெட்டிகள் ஆகியவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
18 வயது முதல் 21 வயது வரையிலான வாக்காளர் களின் வாக்குப்பதிவை அதி கரிக்கும் விதமாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி, கோலப்போட்டி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. வாரச்சந்தை, தினசரி சந்தை, வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து வங்கி ஏ.டி.எம். மையங்களிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொது மக்கள் வாக்குப் பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது குறித்து நேரடி செயல்விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே வாக் காளர்கள் ஏப்ரல் 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தலின் போது தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, வட்டாட்சியர் (தேர்தல்) திருமலை, வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story