இ-சேவை மையங்களில், பட்டா மாறுதல் சான்று வழங்குவதில் தாமதம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் பட்டா மாறுதல் சான்று வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முருகபவனம்,
திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல், நத்தம், சாணார்பட்டி உள்பட 14 ஊராட்சி ஒன்றியங்கள், கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் உள்பட சுமார் 120-க்கும் மேற்பட்ட இடங்களில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில், சாதி சான்றிதழ், வருமானம், இருப்பு, வாரிசு உள்பட 20 வகையான சான்றிதழ்களை பதிவு செய்து, அதற்கேற்ற கால அவகாசத்தில் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இ-சேவை மையங்களின் இணையதள சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அனைத்து வகை சான்றிதழ்களும் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சென்னையில் உள்ள இணையதள சேவையின் ஒட்டுமொத்த ‘சர்வரில்’ கோளாறு ஏற்பட்டது தான் அதற்குரிய காரணமாக அதிகாரிகள் கூறினார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பட்டா மாறுதல் சான்று பதிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இ-சேவை மையத்தின் இணையதள சேவையில் பட்டா மாறுதலுக்கு மட்டும் பதிவு செய்ய முடியாது. இதைத்தவிர மற்ற அனைத்து வகை சான்றிதழ்களுக்கும் பதிவு செய்யலாம். ஆனால் பட்டா மாறுதலுக்கு என, ‘தமிழ் நிலம்’ என்ற பெயரில் தனியாக இணையதளம் ஒன்று உள்ளது. அதில் தான் பதிவு செய்ய வேண்டும்.
அந்த இணையதளத்தில் தற்போது பதிவு செய்ய முடியவில்லை. அதை சரி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனவே இணையதளம் இனிவரும் இரண்டொரு நாட்களில் சரி செய்யப்பட்டு விடும். அதன்பிறகு பட்டா மாறுதல்கள் மீண்டும் பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story