பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் தேஜஸ்வி சூர்யாவுக்கு ‘சீட்’ கிடைத்தது எப்படி?
பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் தேஜஸ்வி சூர்யாவுக்கு ‘சீட்’ கிடைத்தது எப்படி? என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் தேஜஸ்வி சூர்யாவுக்கு ‘சீட்’ கிடைத்தது எப்படி? என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
தேஜஸ்வி சூர்யாவுக்கு ‘சீட்’
நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் மறைந்த மத்திய மந்திரி அனந்தகுமாரின் மனைவி தேஜஸ்வினிக்கு பா.ஜனதா சார்பில் போட்டியிட ‘சீட்’ கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பெங்களூரு தெற்கு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அதே நேரத்தில் அந்த தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பெங்களூரு தெற்கு தொகுதியில் தேஜஸ்வி சூர்யாவுக்கு பா.ஜனதா ‘சீட்’ வழங்கியது. அதன்படி, அவரும் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
இதனால் தேஜஸ்வினி அனந்தகுமார் பா.ஜனதா தலைவர்கள் மீது அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தேஜஸ்வினிக்கு ‘சீட்’ கொடுக்காததால் பா.ஜனதா மூத்த தலைவர்களான ஆர்.அசோக், சோமண்ணா ஆகியோரும் மாநில தலைவர் எடியூரப்பா மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், தேஜஸ்வி சூர்யாவுக்கு பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட ‘சீட்’ கிடைத்தது எப்படி? என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐகோர்ட்டு வக்கீல்
பெங்களூரு தெற்கு தொகுதியில் பா.ஜனதா சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தேஜஸ்வி சூர்யாவுக்கு 28 வயது தான் ஆகிறது. இவரது தந்தை சூர்ய நாராயணா. இவர், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஆவார். தேஜஸ்வி சூர்யாவின் சித்தப்பா ரவி சுப்பிர மணியா. இவர், பசவனகுடி தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். தேஜஸ்வி சூர்யா வக்கீலுக்கு படித்துள்ளார். தற்போது அவர் கர்நாடக ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். சிறு வயதிலேயே தேஜஸ்வி சூர்யா ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்தார். பின்னர் ஏ.பி.வி.பி. அமைப்பின் மாநில பொதுச் செயலாளராக அவர் இருந்துள்ளார். தற்போது கர்நாடக பா.ஜனதா கட்சியின் இளைஞர்(யுவ) மோர்சாவின் பொதுச் செயலாளராக தேஜஸ்வி சூர்யா இருந்து வருகிறார்.
இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பி.எல்.சந்தோஷ் மற்றும் பசவனகுடி தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ.வும் தனது சித்தப்பாவுமான ரவி சுப்பிரமணியா மூலம் தேஜஸ்வி சூர்யாவுக்கு பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட ‘சீட்’ கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாலும், பி.எல்.சந்தோசின் வற்புறுத்தல் காரணமாகவும் தேஜஸ்வி சூர்யாவுக்கு ‘சீட்’ கிடைத்திருப்பதாகவும் தெரிகிறது.
அனந்தகுமாருக்கு ஆதரவாக பிரசாரம்
அதே நேரத்தில் அனந்தகுமாரின் மனைவி தேஜஸ்வினிக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு எடியூரப்பா உள்ளிட்ட சில தலைவர்களும் காரணம் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையில், தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்த பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு டுவிட்டர் மூலமாக தேஜஸ்வி சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் மறைந்த மத்திய மந்திரி அனந்தகுமாருக்கு ஆதரவாக தேஜஸ்வி சூர்யா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். நடைபெற உள்ள தேர்தலில் தேஜஸ்வி சூர்யாவே தெற்கு தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story