அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 27 March 2019 11:30 PM GMT (Updated: 27 March 2019 7:14 PM GMT)

அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் ரவுடியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி (வயது 39). ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு கீர்த்திகா என்ற மகளும், கிஷோர் என்ற மகனும் உள்ளனர்.

கிருஷ்ணமூர்த்தி லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். அரும்பாக்கத்தில் ஏற்கனவே தங்கி இருந்ததால் அங்குள்ள மரக்கடை, தண்ணீர் கேன்கள் வினியோகம் செய்பவர்கள் அவருக்கு பழக்கம். அவர்கள் அழைத்தால் வாடகைக்கு தனது லோடு ஆட்டோவில் மரப்பொருட்கள், தண்ணீர்கேன்களை ஏற்றிச்செல்வார்.

நேற்று காலையும் அவர், தண்ணீர் கேன்களை தனது லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அரும்பாக்கம் பெருமாள்கோவில் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்தது.

கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து தப்பிஓட முயற்சி செய்தார். ஆனால் அந்த கும்பல் கிருஷ்ணமூர்த்தியை மடக்கி அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டியது.

இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அண்ணாநகர் உதவி கமி‌ஷனர் குணசேகரன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கிருஷ்ணமூர்த்தியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேர் கொண்ட கொலை கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

ரவுடி கிருஷ்ணமூர்த்தி மீது ஏற்கனவே அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொலையாளிகள் உருவம் பதிவாகி உள்ளதா? என சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் அரும்பாக்கத்தில் உள்ள கல்லூரி வாசல் முன்பு குமரேசன் என்ற ரவுடி பட்டப்பகலில் ஓட, ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story