நிலுவை சம்பளம் வழங்கக்கோரி ஜிப்மர் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நிலுவை சம்பளம் வழங்கக்கோரி ஜிப்மர் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 March 2019 4:00 AM IST (Updated: 28 March 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

நிலுவையில் உள்ள சம்பளம் வழங்கக்கோரி ஜிப்மர் ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுவை கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு துப்புரவு தொழிலாளர்கள் பலர் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மாதந்தோறும் இவர்களுக்கு 5–ந் தேதி சம்பளம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் 10–ந் தேதியாக மாற்றப்பட்டது. கடந்த 2 மாதங்களாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒப்பந்த ஊழியர்கள் கடும் அவதி அடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை அவர்கள், தங்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும், மாதந்தோறும் 5–ந்தேதி சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து ஜிப்மர் ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்த உடன் ஜிப்மர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் 2 நாட்களில் நிலுவை சம்பளம் வழங்கப்படும். மேலும் மாதந்தோறும் 5–ந் தேதி சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை ஏற்று ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.


Next Story