காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
சாயல்குடியில் காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாயல்குடி,
சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட சதுரயுகவள்ளி நகர், அரண்மனை தெரு, வடக்கு தெரு ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிகளின் குடிநீருக்காக சாயல்குடி சிவன்கோவில் அருகே பேரூராட்சி சார்பில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக இப்பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாயல்குடி பேரூராட்சி அலுவலத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சாயல்குடி போலீசார் பேரூராட்சி அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.