ஊழல் கறைபடிந்தவர்களை இந்த தொகுதி ஏற்காது: “தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும்” தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம்
“ஊழல் கறைபடிந்தவர்களை தூத்துக்குடி தொகுதி ஏற்றுக் கொள்ளாது, தூத்துக்குடி தொகுதியில் தாமரை மலர்ந்தே தீரும்” என்று பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மாலையில் தூத்துக்குடி சிவன் கோவிலில் சாமி கும்பிட்டார். பின்னர் தேர்தல் பிரசாரத்தை அவர் தொடங்கினார். கோவில் அருகே திரண்டு இருந்த கூட்டணி கட்சி தொண்டர்களிடையே அவர் வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தூத்துக்குடி தூய்மையாக இருக்க வேண்டும், தூத்துக்குடி வளர்ச்சி அடைய வேண்டும், வேலைவாய்ப்பு பெருக வேண்டும், இன்றைய வரைபடத்தில் வளர்ச்சி மிகுந்த நாடாளுமன்றம் என்ற பெயரை தூத்துக்குடிபெற வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு நாம் போட்டியிடுகிறோம்.
நான் தூத்துக்குடியை தேர்ந்தெடுத்து இருப்பது, நிச்சயமாக தென்பகுதி இன்னும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகத்தான். தூத்துக்குடியை பொறுத்தவரை யார் யாரெல்லாம் நம்மை எதிர்த்து நிற்கிறார்கள் என்பது தெரியும். ஊழல் கறைபடியாத ஒரு தூத்துக்குடியை உருவாக்க வேண்டும். ஊழல் கறைபடிந்தவர்களை தூத்துக்குடி எந்தவிதத்திலும் ஒப்புக்கொள்ளாது. நேர்மையான வேட்பாளரைத்தான் ஒப்புக்கொள்ளும். இந்த மண்ணின் மகள் நான். எதிர் அணியில் உள்ளவர் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர்தான். என்னை இறக்குமதி செய்யப்பட்டவர் என்று அவர்கள் சொன்னால் நிச்சயம் அது பொய்யாகத்தான் இருக்கும். இந்த மண்ணின் சொந்தக்காரி நான். உங்களில் ஒருத்தி நான். எவ்வளவோ சமூக வலைதளங்களில் என்னை கேலியும், கிண்டலும் செய்து என் நிறம் கருப்பு என்று குறிப்பிடுகிறார்கள். இந்த செம்மண் காடு, பனங்காட்டின் நிறம் கருப்பு. ஆகையால் இந்த பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் அஞ்சாது. என் மீது எந்த குற்ற வழக்கும் கிடையாது.
மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாட்டு மக்களிடம் பேசும் போது, ஒரு தலைவர் இருந்தால் என்னை பாராட்டி இருப்பார். அது குஜராத்தை சேர்ந்த தலைவர் அல்ல. தமிழ்நாட்டை சேர்ந்த காமராஜர் என்று கூறினார். ஆனால் அந்த காமராஜரை இழிவுபடுத்தியவர்கள் இன்று ஓட்டுக்காக உங்கள் முன்னால் நிற்கிறார்கள். என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நான் எதிரணிக்கு சொல்லிக் கொள்கிறேன் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்ற முடியும் என்றால் பா.ஜனதா, அ.தி.மு.க.வால் மட்டுமே முடியும்.
காங்கிரஸ், தி.மு.க.வால் முடியாது. ரத்தக்கறை படிந்த கரங்களோடு உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது இதே காங்கிரஸ், தி.மு.க.தான் ஆட்சியில் இருந்தது. இவர்கள் தடுத்து நிறுத்தவில்லை. மத்திய, மாநில அரசு இணைந்து செயல்பட்டால் நாட்டு மக்களுக்கு நல்லது கிடைக்கும்.
நான் இன்று கட்சியின் மாநில தலைவராக இருக்கிறேன். எனது அரசியல் வாழ்க்கை கரடு முரடானது. அந்த பாதையில் நடந்து உங்களிடம் வந்து உள்ளேன். என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். இங்கு என்னோடு பலம் பொருந்திய அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளனர். உங்கள் பலத்தோடு தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தூத்துக்குடி டபிள்யூ.ஜி.சி. ரோடு, பழைய மாநகராட்சி தீயணைப்பு நிலையம் பகுதி, வ.உ.சி. மார்க்கெட், சுகம் ஓட்டல், குரூஸ்பர்னாந்து சிலை பாலவிநாயகர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ, மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story