பாளையங்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் கலெக்டர் ஷில்பா திறந்து வைத்தார்


பாளையங்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் கலெக்டர் ஷில்பா திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 28 March 2019 3:15 AM IST (Updated: 28 March 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை புதிய பஸ்நிலையத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையத்தை கலெக்டர் ஷில்பா திறந்து வைத்தார்.

நெல்லை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பாளையங்கோட்டை புதிய பஸ்நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையிலும், எப்படி வாக்களிக்க வேண்டும்? என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ள ஏதுவாகவும் அங்கு மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ஷில்பா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, அங்கு வந்து செல்லும் பயணிகள், கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு வாக்குப்பதிவு குறித்து செயல் விளக்கம் காண்பித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி பொது மக்களிடத்தில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இந்த பஸ்நிலையத்திற்கு தினசரி வந்து செல்லும் பயணிகள், கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் வாக்குப்பதிவின் அவசியம் மற்றும் எவ்வாறு வாக்குப்பதிவை கையாள்வது? என்பது குறித்த செயல் விளக்கத்தினை நன்கு அறிந்து கொள்ளும் வகையில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள மின்னணு ஒளித்திரையின் மூலமாகவும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள், வாக்குப்பதிவு குறித்த செயல் விளக்கம் போன்ற விளம்பர பணிகள் மேற்கொள்வது மூலம் வாக்காளர்களிடத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு இலக்கினை எய்திட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயலட்சுமி, நெல்லை உதவி கலெக்டர் மணீஸ்நராணவரே, மாநகராட்சி தலைமை பொறியாளர் நாராயணன்நாயர், மக்கள் தொடர்பு துறை துணை இயக்குநர் அண்ணா, செயற்பொறியாளர் நாராயணன், தாசில்தார் கனகராஜ், துணை தாசில்தார் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story