நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.-தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 27 பேர் வேட்பு மனு ஏற்பு
நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.-தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 27 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் 22 பேருடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
நெல்லை,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை 3 மணியுடன் வேட்பு மனுதாக்கல் முடிவடைந்தது. நேற்று வேட்புமனு மீதான பரிசீலனை நடந்தது. மனுவை திரும்ப பெற நாளை (வெள்ளிக்கிழமை) கடைசிநாள் ஆகும்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க.-தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, நாம் இந்தியன் கட்சி வேட்பாளர்கள் உள்ள 39 பேர் 49 வேட்பு மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ஷில்பா முன்னிலையில் வேட்பு மனு பரிசீலனை நடந்தது.
அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் மற்றும் கட்சி வேட்பாளர்களின் தலைமை முகவர்கள், வக்கீல்கள், சுயேச்சை வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வேட்பு மனுவையும் கலெக்டர் ஷில்பா பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன், வேட்பு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோது அ.தி.மு.க. வேட்பாளர் தரப்பில், அவர் எம்.எல்.ஏ. ஆக இருந்தபோது விடுதியில் தங்கி இருந்த பணத்தை செலுத்தவில்லை. அவர் சுயேச்சை வேட்பாளர் எனவே அவருடைய வேட்பு மனுவில் முன்மொழிந்த 10 பேருடைய பெயரை போலியாக இவர்களே எழுதி உள்ளனர் என்றனர். இதற்கு மைக்கேல் ராயப்பன் தரப்பில், எம்.எல்.ஏ. விடுதியில் தங்கி இருந்தபோது செலுத்தவேண்டிய பணத்தை செலுத்தியதற்கான ரசீதை காண்பித்தனர். முன்மொழிந்த 10 பேரையும் அழைத்து வந்து ஆஜர்படுத்த தயாராக உள்ளோம் என்றும் கூறினார்கள். இதை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.
இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன், வேட்பு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோது சுயேச்சை வேட்பாளர் பால்சாலமோன் பாண்டியன், எழுந்து மனோஜ் பாண்டியன் சொத்து விவரத்தை குறைவாக காட்டி உள்ளார். அவருடைய மனுவை ஏற்க கூடாது என்று கூறினார். அதற்கு நீங்கள் உரிய ஆவணங்களுடன் காட்டவேண்டும் நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறி மனோஜ் பாண்டியன் மனுவை ஏற்பதாக கலெக்டர் ஷில்பா கூறினார்.
இதையடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன், தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன், மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் வெண்ணிமலை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இசக்கியம்மாள், நாம் இந்தியன் கட்சி வேட்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 27 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மாற்று வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் உள்பட 22 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
Related Tags :
Next Story