மயானத்துக்கு பாதை அமைத்து தராததால் தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
பழனி அருகே மயானத்துக்கு பாதை அமைத்து தராததால் தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
பழனி,
பழனியை அடுத்த கணக்கன்பட்டி அருகே உள்ள கோம்பைபட்டி காலனி பகுதியில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இங்குள்ள மயானத்துக்கு செல்ல போதிய பாதை வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த கிராம மக்கள், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக கோம்பைபட்டி பகுதியில் கிராம மக்கள் சார்பில் பேனர் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அதில், மயானத்துக்கு பாதை வசதி செய்து தராததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆயக்குடி போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் கிராம மக்கள் வைத்திருந்த பேனரை அகற்றினர். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
எங்கள் காலனி பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்தால், உடலை மயானத்துக்கு கொண்டு செல்ல பாதை வசதி கிடையாது. இதனால் கடும் அவதிப்பட்டு வருகிறோம். மயானப்பாதை மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தோம். பாதை அமைத்து கொடுக்க கலெக்டர், சப்-கலெக்டர், தாசில்தார் ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர். ஆனால் சில அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இடையூறு செய்து வருகின்றனர்.
எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து எங்களது எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், நாங்கள் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story