பறக்கும் படையின் செயல்பாடுகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பு கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் பறக்கும் படையின் செயல்பாடுகள் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதை கலெக்டர் ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்,
நாடாளுமன்ற தேர்தலுக்காக நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல் தளத்தில் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, தேர்தல் சம்பந்தமான புகார்களை கண்காணிக்க 24 மணிநேரமும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதவிர நாமக்கல் மாவட்டத்தில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிக்கப்படுகின்றன. பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரின் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு, வாகனம் எந்த இடத்தில் செல்கிறது என்பதை தேர்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்தே கணினியின் உதவியுடன் கண்காணிக்கவும், வாகனத்தின் வேகத்தினை கண்காணிக்கவும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இதேபோல் கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் வாக்காளர் தொடர்பான அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாவட்ட இலவச தொலைபேசி அழைப்பு எண் 1950-ஐ தொடர்புக்கொண்டு தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள அலுவலர்களின் பணியினையும், இலவச தொலைபேசி அழைப்பில் வாக்காளர்களுக்கு தேவையான விவரங்களை தெரிவித்து வரும் பணியினையும் கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story