தேசிய ஜனநாயக கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம், “காங்கிரஸ்- தி.மு.க. தலைவர்கள் ஊழலில் திளைத்தவர்கள்” - மத்திய மந்திரி பியூஷ் கோயல் பேச்சு
காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தலைவர்கள் ஊழலில் திளைத்தவர்கள் என்று நாகர்கோவிலில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி செயல் வீரர்கள் கூட்டத்தில் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கூறினார்.
நாகர்கோவில்,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியின் கன்னியாகுமரி தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பா.ஜனதா மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். மேலும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (கிழக்கு), ஜாண்தங்கம் (மேற்கு), தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஜெகநாதன், அமுதன், ச.ம.க. மாவட்ட செயலாளர்கள் அரசன் பொன்ராஜ், கால்டுவின், த.மா.கா. மாநில துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமாரதாஸ், டி.ஆர்.செல்வம் உள்ளிட்டோரும் பேசினர்.
இந்த கூட்டத்தில் மத்திய ரெயில்வே மந்திரியும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகம் மிகச் சிறந்த வெற்றி கூட்டணியை அமைத்து இருக்கிறது. சுவாமி விவேகானந்தர் வழியில் பிரதமர் நரேந்திரமோடி தன் வாழ்க்கையை நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அர்ப்பணித்து உள்ளார் என்றால் மிகையாகாது. விவேகானந்தரின் கனவை நினைவாக்க 120 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தலைவர் உருவாகி இருக்கிறார். அதாவது சாதி, மத பேதமின்றி, இரவு-பகலாக மக்களுக்கு சேவை செய்யக் கூடிய தலைவராக பிரதமர் நரேந்திரமோடி உள்ளார். நாட்டில் ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும். அந்த வீட்டில் கழிவறை இருத்தல் அவசியம். சுத்தமான குடிநீர், இணையதள வசதி, ரெயில் போக்குவரத்து மற்றும் சாலை வசதிகள் அனைத்தும் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் பிரதமர் நரேந்திரமோடியின் கனவு. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏராளமானோர் வீடு கட்டி உள்ளனர். 10 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.
காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தலைவர்கள் ஊழலில் திளைத்தவர்கள். பொன்.ராதாகிருஷ்ணன் ரூ.40 ஆயிரம் கோடிக்கும் மேலான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். ஆனால் அதற்கு பதிலாக காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வினர் செய்த ஊழல் தான் நினைவுக்கு வருகிறது. மீனவர்களுக்கு புதிய துறை அமைக்கப்படும். விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவது போல மீனவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மீனாதேவ், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் மற்றும் புதிய தமிழகம், புரட்சி பாரதம், தமிழ் மக்கள் முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, பா.ம.க., அம்மா தீபா பேரவை ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். பா.ஜனதா நிர்வாகி தேவ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story