பட்டுக்கோட்டை-திருவாரூர் அகல பாதையில் - ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு


பட்டுக்கோட்டை-திருவாரூர் அகல பாதையில் - ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
x
தினத்தந்தி 27 March 2019 10:59 PM GMT (Updated: 27 March 2019 10:59 PM GMT)

பட்டுக்கோட்டை-திருவாரூர் அகல பாதையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு செய்தார்.

பட்டுக்கோட்டை, 

திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தில் மீதம் இருந்த பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையேயான பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த வழித்தடத்தில் ரெயில்களை இயக்குவதற்கான பணிகளில் ரெயில்வே துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இதற்கு முன்னோட்டமாக பெங்களூரு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் நேற்று முன்தினம் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை தண்டவாளத்தில் டிராலியில் சென்று ஆய்வு செய்தார்.

நேற்று 2-வது நாளாக ஆய்வு நடந்தது. இதில் பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையேயான அகல ரெயில் பாதையை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து டிராலியில் முத்துப்பேட்டை வரை சென்றார். வழியில் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள ரெயில் நிலைய கட்டிடங்கள், பாலங்கள், சிக்னல், லெவல் கிராசிங் கேட்டுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

இன்று (வியாழக்கிழமை) முத்துப்பேட்டையில் இருந்து தில்லைவிளாகம் வழியாக திருத்துறைப்பூண்டி வரை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். நாளை (வெள்ளிக்கிழமை) பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.

முன்னதாக பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், தலைமை நிர்வாக அதிகாரி சுதாகர்ராவ், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதயகுமார் ரெட்டி, தலைமை பொறியாளர் இளம்பூர்ணம் மற்றும் அதிகாரிகளை பட்டுக்கோட்டை சி.வி.சேகர் எம்.எல்.ஏ., பட்டுக்கோட்டை நகர வர்த்தக சங்க தலைவர் ராமானுஜம், பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் சங்க தலைவர் ஜெயராமன், துணைத்தலைவர் லட்சுமிகாந்தன், செயலாளர் விவேகானந்தம், பொருளாளர் சுந்தரராஜுலு மற்றும் உறுப்பினர்கள் வரவேற்றனர்.

அப்போது பட்டுக்கோட்டை-திருவாரூர் வழியாக சென்னைக்கு தினசரி இரவு நேர ரெயிலும், ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு தினசரி பகல் நேர விரைவு ரெயிலும் இயக்க வேண்டும் என்றும், நெல், அரிசி, உரம், மீன், கருவாடு, உப்பு உள்ளிட்டவற்றை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வசதியாக சரக்கு ரெயில்களை இயக்க வேண்டும் என்றும் ரெயில்வே அதிகாரிகளிடம், எம்.எல்.ஏ. மற்றும் வர்த்தக சங்கத்தினர், பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story