வேலூரில் பட்டப்பகலில் பயங்கரம்: கழுத்தை அறுத்து ரவுடி கொலை முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை
வேலூர் சேண்பாக்கத்தில் பட்டப்பகலில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்,
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வேலூர் சேண்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டின் பின்புறம் நேற்று மதியம் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டவர் அதே பகுதி மாதா கோவில் தெருவை சேர்ந்த பழனியின் மகன் சத்யா என்கிற சத்யராஜ் (வயது 35), கூலிதொழிலாளி என்பது தெரிய வந்தது. சத்யா மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் கோர்ட்டு வளாகத்தில் வைத்து ரவுடி மகாவை வெட்டி கொல்ல முயன்றது, வழிப்பறி உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் வேலூர் வடக்கு, தெற்கு, சத்துவாச்சாரி போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும், மேலும் அவர் ரவுடி வசூர்ராஜாவின் கூட்டாளியாக பல்வேறு அடாவடி செயல்களில் ஈடுபட்டு வந்தும் தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அவரது தாயார் தனலட்சுமி மற்றும் குடும்பத்தினர் சத்யாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். சிறிதுநேரத்தில் மோப்பநாய் சன்னி அங்கு வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்ற மோப்பநாய் சன்னி யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து சத்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுதொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சத்யா முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது கோஷ்டி தகராறில் கொலை செய்யப்பட்டரா? எனவும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சேண்பாக்கத்தில் பட்டப்பகலில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story