அகஸ்தீஸ்வரம் அருகே, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றி விசாரணை


அகஸ்தீஸ்வரம் அருகே, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றி விசாரணை
x
தினத்தந்தி 28 March 2019 5:05 AM IST (Updated: 28 March 2019 5:59 AM IST)
t-max-icont-min-icon

அகஸ்தீஸ்வரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இதுதொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்தாமரைகுளம்,

அகஸ்தீஸ்வரம் அருகே சுக்குபாறை தேரிவிளை ரெயில்வே கேட் அருகில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள், ஏ.டி.எம். மையத்தின் கதவு கண்ணாடி உடைந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அருகில் சென்று பார்த்த போது, அந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்த 2 ஏ.டி.எம். எந்திரங்களில் ஒரு ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

அவர்கள், இதுபற்றி தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் பகுதியை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது. எந்திரத்தின் முன்பகுதி மற்றும் அடிப்பகுதி ஆகியவை சேதம் அடைந்து இருந்தது.

உடனே சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் வந்து ஏ.டி.எம். எந்திரத்தை பார்த்து விட்டு கொள்ளை முயற்சி நடந்திருப்பதை உறுதி செய்தனர்.

அதைத்தொடர்ந்து அந்த மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை போலீசார் கைப்பற்றி, அதில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்த்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story