ஆத்தூர், பரமத்திவேலூரில் ரூ.7 கோடி தங்கம்-வெள்ளி நகைகள் சிக்கியது பறக்கும் படையினர் நடவடிக்கை


ஆத்தூர், பரமத்திவேலூரில் ரூ.7 கோடி தங்கம்-வெள்ளி நகைகள் சிக்கியது பறக்கும் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 March 2019 5:00 AM IST (Updated: 28 March 2019 5:25 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர், பரமத்திவேலூரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.7 கோடி மதிப்பிலான தங்கம்-வெள்ளி நகைகள் சிக்கியது.

ஆத்தூர், 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று காலை ஆத்தூர் ராசிபுரம் பிரிவு ரோடு அருகே கூட்ரோடு என்ற இடத்தில் வந்த ஒருவேனை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அந்த வேனில் 7 கிலோ தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி நகைகள் இருந்தது தெரியவந்தது. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த நகைகளை ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு தேர்தல் அலுவலரும், உதவி கலெக்டருமான அபுல்காசிமிடம் ஒப்படைத்தனர்.

அவற்றை ஆய்வு செய்த உதவி கலெக்டர் அபுல் காசிம், வேனில் வந்தவர்களிடம் விசாரித்தார்.

விசாரணையில், சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நகை கடையின் கிளைகள் சேலம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல இடங்களில் உள்ளன. இந்த கடைகளுக்கு புதிய நகைகளை கொடுத்து விட்டு அங்கிருந்து பழைய நகைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் மயிலாடுதுறைக்கு சென்றபோது வாகன சோதனையில் சிக்கியது தெரியவந்தது. அதற்குரிய ஆவணங்கள் உள்ளதா? என சரிபார்த்த உதவி கலெக்டர் அபுல்காசிம் இதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வருமான வரித்துறையினர் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அந்த நகைகளை அவர்கள் மதிப்பீடு செய்தனர். இதன்பின்னர் பலத்த பாதுகாப்புடன் அந்த நகைகள் ஆத்தூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இதேபோல் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமத்திவேலூர் அருகே கீரம்பூர் ராசாம்பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சத்தியராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் 30 பெட்டிகளில் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் தேவிகாராணி மற்றும் நாமக்கல் வருமான வரித்துறையினருக்கு பறக்கும் படை அலுவலர் சத்தியராஜ் தகவல் தெரிவித்துள்ளார். இதன் பேரில் அங்கு வந்த வருமான வரித்துறை உதவி ஆணையாளர் பிரியாடி சர்மா மற்றும் வருமான வரித்துறையினர் நகைகளின் எடையையும், அதற்கான ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.

அப்போது எடையின் அளவில் சந்தேகம் ஏற்பட்டதால் சிக்கிய நகைகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு எடுத்துச்சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு எடுத்துச்செல்வது விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று ஆத்தூர், பரமத்திவேலூரில் ரூ.7 கோடி மதிப்பிலான தங்கம்-வெள்ளி நகைகள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story