ராசிபுரம் அருகே லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு 12 டன் பஞ்சு பேல்கள் நாசம்
ராசிபுரம் அருகே தேசியநெடுஞ்சாலையில், நேற்று அதிகாலை லாரி தீப் பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் லாரியும், அதில் இருந்த 12 டன் எடையுள்ள 86 பஞ்சு பேல்களும் எரிந்து நாசமானது.
ராசிபுரம்,
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 46). இவர் சொந்தமாக லாரி வைத்து, வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர் தனது லாரியில் 12 டன் எடையுள்ள 86 பஞ்சு பேல்களை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் கள்ளக்குறிச்சியில் இருந்து கோவைக்கு புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ராசிபுரம் அருகே உள்ள சேலம்- நாமக்கல் தேசியநெடுஞ்சாலையில் ஆண்டகலூர்கேட் அருகே சென்றபோது, லாரியில் திடீரென தீப்பிடித்து லாரியின் கீழ் புறத்தில் இருந்து புகை வெளியேறி உள்ளது. இதை மற்றொரு லாரியில் சென்ற டிரைவர் பார்த்து பழனிசாமியிடம் கூறி உள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த பழனிசாமி, லாரியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்த்து உள்ளார்.
அப்போது லாரியில் இருந்த பஞ்சு பேல்களில் தீப்பற்றி எரிய தொடங்கி உள்ளது. இதுபற்றி ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தரப்பட்டது. தகவல் அறிந்த ராசிபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறை வாகனத்தில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் தீயை அணைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
பின்னர் தனியார் குடிநீர் வினியோக லாரியில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீ அணைக்கப்பட்டது. சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுவதும் அணைக்கப்பட்டது. இருந்தாலும் இந்த தீ விபத்தில் பஞ்சு பேல்களுடன் லாரியும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர்.
இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story