தேர்தல் விதிமீறல் தொடர்பாக 6 பேர் மீது வழக்கு கலெக்டர் தகவல்


தேர்தல் விதிமீறல் தொடர்பாக 6 பேர் மீது வழக்கு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 28 March 2019 11:15 PM GMT (Updated: 28 March 2019 4:42 PM GMT)

தேர்தல் விதிமீறல் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.

திருவண்ணாமலை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி என 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. மேலும் செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இதில் 9 லட்சத்து 71 ஆயிரத்து 811 ஆண் வாக்காளர்களும், 9 லட்சத்து 99 ஆயிரத்து 430 பெண் வாக்காளர்களும், 76 இதர வாக்காளர்களும் என மொத்தம் 19 லட்சத்து 71 ஆயிரத்து 317 வாக்காளர்கள் உள்ளனர். இந்த 8 சட்டமன்ற தொகுதிகளில் 2 ஆயிரத்து 374 வாக்குச்சாவடிகள் உள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தலுக்கு தேவையான கட்டுப்பாட்டு எந்திரம், வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி ஆகியவை குறித்து கணினி மூலம் முதற்கட்ட ஆய்வு நடைபெற்றது. இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட கட்டுப்பாட்டு எந்திரம், வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதியில் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் உள்ள டான்காப் குடோனில் உள்ள வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது.

முன்னதாக கலெக்டர் கந்தசாமி முன்னிலையில் கருவிகள் இருந்த குடோனின் ‘சீல்’ பிரிக்கப்பட்டது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,087 கட்டுப்பாட்டு எந்திரம், 3,087 வாக்குப்பதிவு எந்திரம், 3,112 வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,374 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் பதற்றமானதாக 90 இடங்களில் உள்ள 242 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளது.

மேலும் சுவர் விளம்பரம், சுவரொட்டி போன்ற தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக cV-I-G-IL என்ற செல்போன் செயலி மூலம் 12 புகார்களும், கட்டுப்பாட்டு அறைக்கு 22 புகார்களும், 1950 என்ற எண்ணுக்கு 35 புகார்களும் வந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மேலும் தனியார் மற்றும் அரசு இடங்களில் சுவர் விளம்பரம், சுவரொட்டிகள், பேனர் போன்ற தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகாரின் அடிப்படையில் 5 ஆயிரத்து 208 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story