ரூ.15 கோடி பரிசு விழுந்துள்ளதாக கூறி வாலிபரிடம் ரூ.25 லட்சம் மோசடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
செல்போன் எண்ணுக்கு ரூ.15 கோடி பரிசு விழுந்துள்ளதாக கூறி வாலிபரிடம் ரூ.25 லட்சத்தை மர்மநபர்கள் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
வேலூர்,
ஆம்பூர் தாலுகா வேப்பங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜ் (வயது 26). இவர் நேற்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு மே மாதம் என்னுடைய செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் சிங்கப்பூரில் இருந்து பேசுகிறோம் என்று கூறினார். மேலும் அவர் உங்களுடைய செல்போன் எண்ணுக்கு குலுக்கல் முறையில் ரூ.15 கோடி பரிசு விழுந்துள்ளது என்றார். இதை நான் நம்பினேன். அவர்கள் ரூ.15 கோடி வேண்டும் என்றால் அதற்கான வரி செலுத்த வேண்டும் என்றார். அதன்படி நான் ரூ.17 லட்சம் ஏற்பாடு செய்தேன்.
பின்னர் அவர்கள் ஒரு வங்கிக்கணக்கு எண் கொடுத்தனர். அதில் பணத்தை செலுத்துமாறு கூறினர். அந்த வங்கிக் கணக்கு எண்ணை சோதனை செய்தபோது நம்பகத்தன்மை கொண்ட வங்கிக்கணக்கு போல் தெரிந்தது. நானும் ரூ.17 லட்சத்தை செலுத்தினேன். பின்னர் அவர்கள் பணம் அனுப்ப சில சட்டவிதிமுறைகள் உள்ளது அதை சரிசெய்ய வேண்டும் கூடுதலாக பணம் கேட்டனர். நானும் அதை நம்பி கடன் வாங்கி ரூ.8 லட்சத்தை அனுப்பினேன். ஆனால் அவர்கள் பரிசு பணத்தை அனுப்பவில்லை.
இதுகுறித்து கேட்டபோது கூடுதலாக பணம் வேண்டும் என்றனர். எங்களது நிறுவனத்தை சேர்ந்தவர்கள் டெல்லியில் உள்ளனர். அவர்களிடம் ரூ.1 லட்சம் வழங்குமாறு கூறினர். தொடர்ச்சியாக பணம் கேட்டு என்னிடம் இருந்து ரூ.25 லட்சம் மோசடி செய்து விட்டனர். பணத்தை கேட்டால் பதில் சரிவர தெரிவிக்கவில்லை. எனவே எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்ற போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அதிகாரிகள் கூறுகையில், இதுபோன்று சில கும்பல் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகிறது. மக்கள் யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்றனர்.
Related Tags :
Next Story