சேலத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனை: 73½ கிலோ தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் வருமான வரித்துறையினர் விசாரணை
சேலத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது 73½ கிலோ தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாதகாப்பட்டி கேட் பகுதியில் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி ராஜாமணி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த டெம்போவை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் இருந்த பார்சல்களில் 73½ கிலோ தங்கம், வெள்ளி நகைகள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 கோடியே 40 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ரோகிணி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான சதீஷ் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி நகைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பார்சல்களில் தங்கம், வெள்ளி நகைகள் எவ்வளவு இருக்கிறது என்பதை எடை பார்த்து அளவீடு செய்யப்பட்டது. இதற்கிடையில் இந்த நகைகளை கொண்டு வந்தவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது அதிகாரிகளிடம், இந்த நகைகள் மும்பையில் இருந்து விமானம் மூலம் கோவை கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து சேலம் வழியாக மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதாகவும், இதற்கு உரிய ஆவணம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் வருமானவரி முறையாக செலுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வருமான வரித்துறையினர் மற்றும் பறக்கும்படையினர் கேட்ட அனைத்து ஆவணங்களையும் அவர்கள் தாக்கல் செய்தனர். உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் அவர்களிடம் அந்த நகைகளை அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்தனர்.
முன்னதாக இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரோகிணி கூறும்போது, ‘சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பு குழுக்கள் ஒரு தொகுதிக்கு 3 இருந்ததை 9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 73½ கிலோ தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் அச்சமின்றி மிக அமைதியான முறையில் வாக்களிக்க போலீஸ் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 261 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் பொது பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம்’ என்றார்.
Related Tags :
Next Story