37 எம்.பி.க்கள் இருந்தும் தமிழகத்தின் உரிமைகள் பறிபோய் விட்டன கி.வீரமணி பேச்சு


37 எம்.பி.க்கள் இருந்தும் தமிழகத்தின் உரிமைகள் பறிபோய் விட்டன கி.வீரமணி பேச்சு
x
தினத்தந்தி 29 March 2019 4:30 AM IST (Updated: 28 March 2019 11:16 PM IST)
t-max-icont-min-icon

37 எம்.பி.க்கள் இருந்தும் தமிழகத்தின் உரிமைகள் பறிபோய் விட்டன என்று கி.வீரமணி கூறினார்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை ஆதரித்து பட்டுக்கோட்டை காந்தி சிலை அருகே தி.க. சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வீரையன் தலைமை தாங்கினார். செயலவை தலைவர் அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் தி.க. தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

கடந்த முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியா? லேடியா? என கேள்வி கேட்ட ஜெயலலிதாவின் கட்சி இன்று மோடியிடம் அடகு வைக்கப்பட்டு இருக்கிறது.


ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கிடைக்கும் என பா.ஜனதாவினர் கூறினர். ஆனால் பல கோடி பேருக்கு வேலை போய் விட்டது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் மக்கள் துன்பத்துக்கு ஆளானார்கள். தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பை பிரதமர் நரேந்திரமோடி வந்து பார்த்தாரா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வார்த்தையை கூட அவர் ஆறுதலாக கூறவில்லை.

தமிழக அமைச்சர்கள் மத்திய அரசிடம் தமிழ்நாட்டை அடகு வைத்து விட்டனர். 37 எம்.பி.க்கள் இருந்தும் தமிழக உரிமைகள் பறிபோய்விட்டன.


சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சர் ஆவார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் ஆவார். மத்தியில் அடகு வைக்கப்பட்ட தமிழ்நாடு மீட்கப்படும். பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் காக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக நகர தலைவர் சேகர் வரவேற்றார். முடிவில் ஒன்றிய தலைவர் ரெ.வீரமணி நன்றி கூறினார்.

Next Story