கூட்டுறவு சங்க தலைவர் கொலை வழக்கில் தம்பதி உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை - திண்டுக்கல் கோர்ட்டு தீர்ப்பு
கூட்டுறவு சங்க தலைவர் கொலை வழக்கில் தம்பதி உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் கூடுதல் செசன்சு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த சிவஞானபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர், அதே பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராக இருந்தார். இவருடைய மனைவி சுமதி. செந்தில்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான வீரணனுக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இதுதொடர்பாக நிலக்கோட்டை போலீசிலும் செந்தில்குமார் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி செந்தில்குமார் மோட்டார் சைக்கிளில் அணைப்பட்டி-சிவஞானபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஒரு வேனில் சிலர் வந்தனர். திடீரென அந்த வேன் செந்தில்குமார் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.
அப்போது வேனில் இருந்து இறங்கிய கும்பல், இரும்பு கம்பியால் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து செந்தில்குமாரின் மனைவி நிலக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், செந்தில்குமாரின் உறவினரான வீரணன் மற்றும் அவருடைய மனைவி ஜெயலட்சுமி, மகன்கள் கணேசன் (36), முருகன் (29), உறவினர் அன்புபாண்டி (21) ஆகியோர் வேனை மோதவிட்டு பின்னர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி மதுரசேகர் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து 5 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story