திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட முன்னேற்பாடு பணிகள் கலெக்டர் ஆய்வு


திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட முன்னேற்பாடு பணிகள் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 29 March 2019 4:30 AM IST (Updated: 29 March 2019 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர்,

திருவாரூா தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. அதனுடன் கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம் பிடிக்கப்படுகிறது. முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர் தேர் காலை 5 மணிக்கு வடம் பிடிக்கப்படுகிறது. மேலும் 30 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட ஆழித்தேரானது அலங்கரிக்கப்பட்டதற்கு பிறகு 96 அடி உயரமும், 300 டன் எடையும் கொண்டது.

சுகாதாரத்துறை மூலம் 4 இடங்களில் 2 நிலையான மருத்துவ முகாம்களும், தேரினை பின் தொடர்ந்து ஒரு 108 அவசர சேவை ஊர்தியும் மற்றும் 2 நடமாடும் மருத்துவக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மருத்துவக்குழுவிலும் ஒரு மருத்துவ அலுவலர், மருந்தாளுனர், செவிலியர், பணியாளர் என 4 அலுவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள். திருவாரூர் நகராட்சியின் மூலம் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வசதிக்காக நகரின் முக்கிய இடங்கள் மற்றும் தேரோடும் வீதிகளில் 10 சின்டெக்ஸ் டேங்குகள் அமைத்து குடிநீர் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மேலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 2 நிரந்தர கழிவறைகளும், 2 எண்ணிக்கையிலான தற்காலிக கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. தேரோடும் வீதிகள் மற்றும் முக்கிய பொதுமக்கள் கூடும் அனைத்து பகுதிகளிலும் 170 பொது சுகாதார பிரிவு பணியாளர்களை கொண்டு உடனுக்குடன் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நகரில் பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் பக்தர்கள் கூடும் இடங்களில் தொற்றுநோய்கள் பரவாத வண்ணம் சுண்ணாம்பு தூள் தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும். தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறையின் மூலம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் தலைமையில், 4 தீயணைப்பு ஊர்திகள் நிலை நிறுத்தம் செய்யப்பட உள்ளது. ஆழித்தேரோட்டத்தின் போது அவசர கால சிறப்பு மீட்பு ஊர்தியும் மற்றும் நீர்தாங்கி ஊர்தியும் பின் தொடர்ந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவசர மீட்பு பணிக்கென ஒரு நிலைய அலுவலர் தலைமையில், 10 தீயணைப்பு வீரர்கள் கொண்ட 2 கமாண்டோ குழு அமைக்கப்பட்டு 2 பிரிவுகளாக பணியாற்ற உள்ளனர். பாதுகாப்பு பணியில் 15 அலுவலர்களும், 70 பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின் போது உதவி கலெக்டர் முருகதாஸ், நகராட்சி ஆணையர் சங்கரன், கோவில் செயல் அதிகாரி கவிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story