தினமும் ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விடுகிறார்: ஜெயலலிதா மீது மு.க.ஸ்டாலினுக்கு ஏன் இந்த திடீர் அக்கறை? தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
ஜெயலலிதா மீது மு.க.ஸ்டாலினுக்கு ஏன் இந்த திடீர் அக்கறை? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தூத்துக்குடி,
ஜெயலலிதா மீது மு.க.ஸ்டாலினுக்கு ஏன் இந்த திடீர் அக்கறை? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இயலாமை
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் உள்ள தலைமை தேர்தல் காரியாலயத்தில் நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விண்வெளியில் இயங்கி கொண்டு இருக்கும் செயற்கைக்கோளை கூட எதிர்கொள்ளும் வகையில் இந்தியா முன்னேறி உள்ளது என்று பிரதமர் மோடி பெருமையோடு கூறினார். அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா அந்த பெருமையை பெற்று உள்ளது. இதிலும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. இது அவர்களின் இயலாமையை காண்பிக்கிறது. பா.ஜனதா எந்த திட்டத்தை அறிவித்தாலும் தேர்தலுக்காக அறிவிக்கிறார்கள் என்று கூறுகின்றனர். ஆனால் ராகுல் மட்டும் மக்கள் நலனுக்காக திட்டங்களை அறிவிப்பதாக கூறுகிறார்கள்.
தூத்துக்குடியை பொறுத்தவரை ஆட்சி அதிகாரம் கையில் வந்தால் அதனை எப்படி தவறாக பயன்படுத்த முடியும் என்பதற்கு தி.மு.க. வேட்பாளர் கனிமொழி உதாரணம். 2ஜி வழக்கு பற்றி அனைவருக்கும் தெரியும். ஆட்சி அதிகாரம் வந்தால் நேர்மறையாக வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும் என்பதற்கு மோடிஜி உதாரணம். தூத்துக்குடி வளர்ச்சிப்பாதைக்கு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம்.
திடீர் அக்கறை
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விட்டுக்கொண்டு இருக்கிறார். ஜெயலலிதா மீது அவருக்கு திடீர் அக்கறை வந்து விட்டது. சட்டமன்றத்தில் ஒரு பெண் தலைவர் என்றும் பார்க்காமல் அவரை தி.மு.க.வினர் எவ்வளவு உதாசீனப்படுத்தி வெளியேற்றினர் என்பதை அனைவரும் அறிவார்கள். இன்று அவர் ஜெயலலிதாவின் உடல்நலத்தை பற்றி விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என்கிறார். இவருக்கு ஏன் இந்த திடீர் அக்கறை? எல்லாவற்றையும் அரசியலாக்கி கொண்டு இருக்கிறார்கள்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் போட்டியிடும் தொகுதியில், அவருக்கு ஓ.பி.எஸ். மகன் என்பதை தவிர வேறு என்ன தகுதி இருக்கிறது? என்று கேட்கிறார். இவர்கள் கூட்டணியில் 9 வாரிசுகளுக்கு சீட் கொடுத்து உள்ளனர். எந்த தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தார். தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டு இருப்பது மு.க.ஸ்டாலினால்தான் முடியும்.
அமித்ஷா பிரசாரம்
பா.ஜனதா தலைவர் அமித்ஷா வருகிற 2-ந் தேதி மதியம் 12 மணிக்கு தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவருடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்கிறார். குற்ற வழக்குகளை நாங்கள் சந்திக்கவில்லை என்ற நோக்கத்தில் சமூக ஊடகத்தில் செய்யப்பட்ட பதிவை வேறுவிதமாக கூறி வருகிறார்கள். நீர்வழிப்பாதை அமைத்தல், சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத தொழிற்சாலைகளை கொண்டு வருவோம்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கிய பிறகுதான் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டம் வந்த போது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு நன்றி தெரிவித்தாரா? முந்தைய ஆட்சிகாலத்தில் நீங்கள் ஏன் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரவில்லை. இதற்கு முதலில் பதில் சொல்லட்டும்.
வரவேற்கிறோம்
கனிமொழியின் தாய் கோவிலுக்கு செல்வதை வரவேற்கிறோம். ஆனால் நாங்கள் வெளிப்படையாக கோவிலுக்கு செல்கிறோம். அவர்கள் எல்லாவற்றையும் மறைத்து செய்கிறார்கள். அவர்கள் கோவிலுக்கு செல்வார்கள். ஆனால் தொண்டர்கள் கோவிலுக்கு செல்லக்கூடாது. அவர்கள் இந்தி படிப்பார்கள். தொண்டர்கள் இந்தி படிக்கக் கூடாது. தொண்டர்கள் சாதாரண பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டும். இதுதான் அவர்களின் கொள்கை. மற்றவர்களின் மதத்தை அவதூறாக பேசாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story