இந்த தேர்தலோடு தி.மு.க.வின் அத்தியாயம் முடிவுக்கு வரும் பெரம்பலூரில் டாக்டர் ராமதாஸ் பேச்சு


இந்த தேர்தலோடு தி.மு.க.வின் அத்தியாயம் முடிவுக்கு வரும் பெரம்பலூரில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 29 March 2019 4:30 AM IST (Updated: 29 March 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

இந்த தேர்தலோடு தி.மு.க.வின் அத்தியாயம் முடிவுக்கு வரும் என்று பெரம்பலூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில் நேற்று மாலை தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டில் பல்வேறு விதமான கொள்ளையர்கள் உள்ளனர். இதில், இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுபவர் ஒரு கல்வி கொள்ளையர். அவரது கல்வி கொள்ளையை எதிர்த்து, பா.ம.க. வழக்கு தொடர்ந்ததன் காரணமாக அவர் சிறை சென்றார். ஒரு சாதாரண குமாஸ்தாவாக இருந்தவர், இன்று ரூ.10 லட்சம் கோடி நிதி குவித்துள்ளார். அவரை இந்த தொகுதியில் வாக்காளர்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். அ.தி.மு.க.வுடனான கூட்டணி இயற்கையான கூட்டணி. சகோதரத்துடன் தொண்டர்கள் பழகுவார்கள். நாங்கள் தி.மு.க.வுடனும் கூட்டணி வைத்திருக்கிறோம். அவர்கள் மாலை போட்டு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து விடுவார்கள்.

பின்தங்கிய பெரம்பலூர் தொகுதிக்கு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வரவேண்டும் என்றால், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வை மீண்டும் வெற்றிபெறச் செய்ய வேண்டும். ஆட்சியில் இல்லாத எதிர்க்கட்சிகளால் வளர்ச்சித் திட்டங்கள் எதையும் கொண்டுவர முடியாது. தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவியை வாங்கிக் கொடுத்தவன் நான் தான். ஆனால், தற்போது அவர் என்னை திட்டி வருகிறார்.

இந்த தேர்தலோடு தி.மு.க.வின் அத்தியாயம் ஒரு முடிவுக்கு வரும். தி.மு.க. ஒரு வன்முறை கட்சி. நில அபகரிப்பு கட்சி. இந்திரா காந்தியை மதுரை விமான நிலையத்தில் கொலை செய்ய முயன்றவர்கள். காமராஜரை தரக்குறைவாக விமர்சித்தவர்கள். பெரம்பலூரில் கூட அழகுநிலையம் நடத்திய பெண் ஒருவரை தி.மு.க. கட்சிக்காரர் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

இந்த பகுதியை சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பவர் மறைவுக்கு விளம்பரம் கொடுத்த அவரது மனைவியை மிரட்டி வருகிறார்கள். தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பதும், புராண கதையில் வரும் பத்மாசூரன் போல் தனது தலையில் கை வைத்து, தன்னைத் தானே அழித்துக்கொள்வதும் ஒன்று தான்.

எனவே இந்த தொகுதியில் உள்ள வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்.ஆர்.சிவபதியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரசார பொதுக்கூட்டத்தில் பெரம்பலூர் (தனி) தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், பா.ம.க. துணை பொதுச்செயலாளர் வைத்தி, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் துரை.காமராஜ், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சாமி.இளங்கோவன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story