கரூரில் இயங்கி வரும் தனியார் கொசுவலை நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை


கரூரில் இயங்கி வரும் தனியார் கொசுவலை நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
x
தினத்தந்தி 29 March 2019 4:45 AM IST (Updated: 29 March 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் இயங்கி வரும் தனியார் கொசுவலை நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

கரூர்,

கரூர் வெண்ணெய்மலை பகுதியில் ஒரு தனியார் கொசுவலை நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் செம்மடை, சின்னதாராபுரம் ரோடு உள்ளிட்ட இடங்களில் கொசுவலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கொசுவலை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு இங்கு வர்த்தகம் நடப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று மாலை திருச்சி வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் 8 பேர் 3 கார்களில் வந்து, வெண்ணெய்மலையிலுள்ள அந்த கொசுவலை நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாமல் பணம் ஏதும் பதுக்கப்பட்டுள்ளதா? தேர்தலில் பட்டுவாடா செய்ய பணம் ஏதும் பதுக்கி வைத்துள்ளனரா? என்றும், இதுவரை வருமான வரி செலுத்தியதற்கான ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்றும் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அலுவலகத்தில் இருந்த கொசுவலை ஏற்றுமதி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்து விசாரித்தனர். அப்போது அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. நேற்று இரவு வரை இந்த சோதனை நீண்டது. இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் வணிக நிறுவனங்களில் ரூ.10 லட்சத்துக்கு மேலாக பணம் அல்லது பொருட்கள் பரிமாற்றம் நடந்தால் அது பற்றிய ஆவணங்கள் சரிபார்க்கப்படுகிறது. அந்த வகையில் தான் அதிகளவில் வர்த்தகம் நடைபெறும் இந்த நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதை தவிர, தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கு வரும் புகார்களின் அடிப்படையிலும் சில இடங்களில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தனர். 

Next Story