மயிலாப்பூரில் வாகன சோதனை ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.2 கோடி பறிமுதல்
தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் மயிலாப்பூர், அடையாறில் ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
அடையாறு,
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் மயிலாப்பூர் வடக்கு மாட வீதி அருகே மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினரும், இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் பாலு தலைமையில் போலீசாரும் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாப்பூர் உதவி கமிஷனர் மயில்வாகனன், உதவி கமிஷனர் ரமேஷ் ஆகியோர் பணத்தை வேனுடன் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அந்த வேனில் ரூ.1 கோடியே 45 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக இந்த பணத்தை தனியார் நிறுவன ஊழியர்கள் லெனின் (வயது 33), பவித்ரன் (28) ஆகியோர் கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மூலம் சேப்பாக்கத்தில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அடையாறு வாட்டர் டேங்க் சிக்னல் அருகே நேற்று தேர்தல் பறக்கும் படையினர், போலீசாருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பும் வேன் வந்தது.
அந்த வேனை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதில் ரூ.50 லட்சம் இருந்தது. ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், வேனில் இருந்த ரூ.50 லட்சத்தை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story