சேலத்தில் பரபரப்பு நடிகை நமீதா காரில் பறக்கும் படையினர் சோதனை எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம்
சேலத்தில் நடிகை நமீதா காரில் பறக்கும் படையினர் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் சேலம் புலிக்குத்தி தெரு பகுதியில் பறக்கும்படை அலுவலர் ஆனந்த யுவனேஷ் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை சோதனை செய்வதற்காக அதிகாரிகள் நிறுத்தினர். அந்த காரில் நடிகை நமீதா மற்றும் அவருடைய கணவர் உள்பட 4 பேர் இருந்தனர். இதையடுத்து அந்த காரை சோதனையிட அதிகாரிகள் முயன்றனர். இதற்கு நமீதா உள்பட அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தான் வாகன சோதனை நடத்தப்பட்டு வருவதாக அவர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவருடைய காரில் சோதனை நடத்தப்பட்டது. நமீதா வைத்திருந்த பையை பெண் போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது அவர்களிடம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம், நகை எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் அந்த காரை செல்ல அனுமதித்தனர். நடிகை நமீதா தனது கணவருடன் ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்தது அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.
Related Tags :
Next Story