விபத்தில் படுகாயம் அடைந்த அரசு அலுவலக உதவியாளருக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி நாமக்கல்லில் பரபரப்பு
விபத்தில் படுகாயம் அடைந்த வருவாய் ஆய்வாளர் அலுவலக உதவியாளருக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் நேற்று நாமக்கல் பஸ்நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல்,
சேலம் மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 49). இவர் சேலம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந் தேதி இவர் வருவாய் ஆய்வாளர் ரகுவுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணம் செய்தார். அஸ்தம்பட்டி - அணைமேடு சாலையில் சென்று கொண்டு இருந்தபோது அந்த வழியாக வந்த சேலம் கோட்டத்துக்கு சொந்தமான அரசு பஸ் ஒன்று இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் வேணுகோபால் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் வக்கீல் ராஜா மூலம் அரசு போக்குவரத்து கழகம் தனக்கு நஷ்டஈடு வழங்கக்கோரி நாமக்கல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந் தேதி வேணுகோபாலுக்கு அரசு போக்குவரத்து கழகம் ரூ.2 லட்சத்து 19 ஆயிரம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறினார்.
ஆனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நஷ்டஈட்டு தொகை வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து வேணுகோபால் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தற்போதைய நீதிபதி கருணாநிதி சேலம் கோட்டத்துக்கு சொந்தமான அரசு பஸ் ஒன்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து நேற்று நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு புறப்பட இருந்த அரசுபஸ் கோர்ட்டு அமீனா ரவி முன்னிலையில் ஜப்தி செய்யப்பட்டது. இந்த சம்பவம் சிறிது நேரம் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story