திருச்செங்கோடு பகுதி முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனுக்கு அமைச்சர் தங்கமணி வாக்கு சேகரித்தார்
திருச்செங்கோடு பகுதி முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனுக்கு ஆதரவாக அமைச்சர் தங்கமணி வாக்கு சேகரித்தார்.
திருச்செங்கோடு,
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் அ.தி.மு.க. வேட்பாளராக பி.காளியப்பன் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை திருச்செங்கோடு நகராட்சி பகுதியின் 33 வார்டுகளிலும் வாக்காளர்களை சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது பி.காளியப்பனை ஆதரித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி திறந்த ஜீப்பில் சென்று வீதி வீதியாக வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
திருச்செங்கோடு நகராட்சி 1-வது வார்டு திருநகர் காலனியில் இருந்து தொடங்கி சண்முகபுரம், செங்கோடம்பாளையம், நெசவாளர் காலனி, எட்டிமடைபுதூர், எஸ்.என்.டி.ரோடு, ஏ.கே.சி.ரோடு, பெரியபாவடி, குமரேசபுரம், அண்ணா பூங்கா, கரட்டுப்பாளையம், கொல்லபட்டி, சி.எச்.பி.காலனி, நரிப்பள்ளம், படையாச்சி தெரு, சந்தைப்பேட்டை, சாணார்பாளையம், கூட்டப்பள்ளி, கீழேரிப்பட்டி, சூரியம்பாளையம் ராஜாகவுண்டம் பாளையம், சட்டையம்புதூர், தொண்டிகரடு, மாங்குட்டைபாளையம், சீத்தாராம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10 மணி வரை திறந்த ஜீப்பில் நின்றவாறு அமைச்சர் பி.தங்கமணி வாக்கு சேகரித்தார்.
அப்போது அமைச்சர் பேசியதாவது:- மத்தியிலும், மாநிலத்திலும் நிலையான ஆட்சி வரவேண்டும். மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நமது வேட்பாளர் பி.காளியப்பனை வெற்றிபெற செய்ய வேண்டும். திருச்செங்கோடு நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காவிரி குடிநீர் வழங்குவதில் தண்ணிறைவு அடைந்து, மேலும் திருச்செங்கோடு நகருக்கு என்று தனியாக ரூ.84 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
மேலும் சாலை வசதிகள், சாக்கடை வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. திருச்செங்கோடு நகர சுற்றுப்பாதை திட்டம் நிறைவேற்ற தீவிர கவனம் செலுத்தப்பட்டு விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே ஜெயலலிதாவின் ஆட்சியின் சாதனைகள் தொடரவும், மத்தியில் நிலையான ஆட்சி மலரவும் வாக்காளப் பெருமக்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
முன்னதாக பல்வேறு இடங்களில் அமைச்சருக்கும், வேட்பாளருக்கும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்தும், அதிர்வேட்டுகள் முழங்கவும் வரவேற்பு கொடுத்தனர்.
நிகழ்ச்சியில் திருச்செங்கோடு எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதி, அ.தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் இரா.முருகேசன், நகர செயலாளர் தி.த.மனோகரன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன், தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகி விஜய்கமல், பா.ஜ.க. மாவட்ட நிர்வாகி வக்கீல் நாகராஜன், தமிழ்மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்வகுமார், பா.ம.க. தமிழ்மணி மற்றும் நகர, வார்டு, கிளை நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story