குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரிக்கும் பணி தீவிரம்


குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 28 March 2019 10:45 PM GMT (Updated: 28 March 2019 8:33 PM GMT)

குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரிக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. அந்த தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, வேட்பு மனு பரிசீலனையும் முடிவடைந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) இறுதி வேட்பாளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெரம்பலூர் (தனி) பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கும், குன்னம் சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டவையாகும். இந்நிலையில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள், இந்த தேர்தலில் முதல் முறையாக பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரங்கள் ஆகியவை பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் தேதி நெருங்குவதால் குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரங்களை அனுப்பும் பணியில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலத்தில் உள்ள குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரங்களை பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி விஸ்வநாதன், குன்னம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அதிகாரி மஞ்சுளா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பிரித்து முடித்தவுடன் உடனடியாக அந்த எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன் லாரிகள் மூலம் குன்னம் தாலுகா அலுவலகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்று, அங்கிருந்து வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story