மாணவி பாலியல் பலாத்காரம், 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
தாராபுரத்தில் மாணவியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
திருப்பூர்,
திண்டுக்கல்லை சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இவள் கோவில் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கடந்த 9-3-2017 அன்று வந்தாள். அன்று இரவு 9 மணி அளவில் அந்த மாணவி தனது ஆண் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று ஓரிடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்துள்ளாள்.
அப்போது கூலித்தொழிலாளர்களான தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்த சேதுபதி (வயது 24), வாய்க்கால் திட்டு பகுதியை சேர்ந்த காளிமுத்து(23) ஆகியோர் அங்கு வந்தனர். பின்னர் மாணவியின் நண்பரை தாக்கிவிட்டு அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறித்துள்ளனர். அந்த மாணவியை மட்டும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சேதுபதியும், காளிமுத்துவும் அங்குள்ள தோட்டத்துக்குள் அழைத்துச்சென்றனர். அங்கு வைத்து இருவரும் மாறி, மாறி மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் நள்ளிரவு மாணவியை மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏற்றி தாராபுரத்தில் ஓரிடத்தில் விட்டு விட்டு 2 பேரும் தப்பிவிட்டனர். இதுகுறித்து மாணவி தனது உறவினரிடம் தனக்கு நேர்ந்த கதியை கூறி அழுதாள். உடனடியாக தாராபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சேதுபதி, காளிமுத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மாணவியை கடத்திச்சென்ற குற்றத்துக்காக 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற குற்றத்துக்காக 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் ஆகிய தண்டனைகளை தனித்தனி காலத்தில் அனுபவிக்க சேதுபதி, காளிமுத்து ஆகிய 2 பேருக்கும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story