ஊட்டி-கூடலூர் சாலையில், சாக்கடை கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
ஊட்டி-கூடலூர் சாலையில் சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
ஊட்டி,
தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊட்டி-கூடலூர் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஊட்டி நொண்டிமேடு சந்திப்பு பகுதியில் இருந்து சேரிங்கிராஸ், கலெக்டர் அலுவலக சந்திப்பு, ஹில்பங்க், பிங்கர்போஸ்ட் வரை 4.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அகலப்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
பிங்கர்போஸ்ட், ஹில்பங்க், கலெக்டர் அலுவலக சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் இருந்த மண் திட்டுகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. அந்த இடங்களில் மண்சரிவு ஏற்படாமல் இருக்க கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது. சில இடங்களில் பாறைகள் துளை போட்டு உடைக்கப்பட்டு வருகிறது.
சாலை அகலப்படுத்தும் பணியால் தேசிய நெடுஞ்சாலையோரம் ஆங்காங்கே மண் குவியல்கள் காணப்படுகிறது. மேலும் சாலை மீது மண் மூடி கிடப்பதால், வாகனங்கள் சென்று வரும் போது புழுதி பறக்கிறது.
இதனால் நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். காற்று வீசும் போது அதிகமாக புழுதி பறப்பதால், முன்னால் செல்லும் வாகனங்கள் தெரிவது இல்லை. அதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிறிது நேரம் நின்று விட்டு, பின்னர் தங்களது வாகனங்களை இயக்குகின்றனர். இதனால் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. சாலையோரத்தில் மண் குவியல்கள் அகற்றப்படாததால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதற்கிடையே பிங்கர்போஸ்ட் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணியால் சாக்கடை கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் குழி ஏற்பட்டு உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடி கொண்டே இருக்கிறது. அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் தூர்நாற்றம் தாங்க முடியாமல் அவதி அடைந்து உள்ளனர். மண் குவியல்களுக்கு இடையே கழிவுநீர் தேங்கி நின்று வெளியேறுகிறது. சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது வாகனங்கள் கழிவுநீரை அடித்து செல்கின்றன.
இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே இயற்கை அழகு நிறைந்த ஊட்டியில் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் நடவடிக்கை எடுப்பதோடு, சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுவதை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story